முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பாடிய இளையராஜா: ஆச்சர்ய வீடியோ!

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

சென்னையில் நடைபெற்று வரும் இளையராஜா75 நிகழ்ச்சியில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இசைஞானி பாடல் பாடியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் விதமாகவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளைப் போற்றும் வகையிலும் ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்றும், நாளையும் பிரமாண்டமான கலைவிழா நடைபெற உள்ளது.

இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையிலான குழு ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தி வருகிறது.

இந்த விழாவில், ரஜினி, கமல் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை கோலாகலமாக தொடங்கிய இவ்விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பட உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் தோன்றிய இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருப்பதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், "உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விடயம்" என கூறினார்.

இதற்கிடையில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரி, "ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும்'’ எனக்கோரிக்கை வைத்தார்.

சிரித்தபடியே அதனை ஏற்றுக்கொண்ட இளையராஜா, "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ" என ஆரம்பிக்க, ஏ.ஆர் ரஹ்மான் கீ போர்டு வாசிக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். இதனால் சிறிது நேரம் அரங்கமே அதிர்ந்தது.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்