ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை ட்வீட்! மன்னிப்பு கோரிய நடிகர் விவேக் ஓபராய்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து தனிப்பட்ட முறையில் தேர்தல் முடிவுகளை தொடர்புபடுத்தி செய்த ட்வீட்டுக்கு, நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கோரினார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் (Exit Poll) நேற்று முன்தினம் வெளியாகின. இந்த கணிப்புகளுடன் நடிகை ஐஸ்வர்யா ராயை ஒப்பிடப்பட்ட மீம்ஸை, நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படம் ஐஸ்வர்யா ராயை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, விவேக் ஓபராயிக்கு கண்டனங்கள் எழுந்தன. அத்துடன் தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ‘விவேக் ஓபராயின் பதிவு மிகவும் குற்றமானது, நெறிமுறைகளை மீறியது. பெண்களின் மாண்பு மீதும், பெண்களின் மீதும் அவர் எந்த அளவுக்கு அவமரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேட்டி ஒன்றில் விவேக் ஓபராய் கூறுகையில், இந்த விடயத்தில் நான் மன்னிப்பு கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை. மன்னிப்பு கேட்பதில் நான் வல்லுநர். ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்பதை மட்டும் கூறிவிடுங்கள். எனக்கு சிலர் இந்த மீம்ஸை அனுப்பினார்கள்.

நான் சிரித்துவிட்டு அவர்களின் கற்பனை திறனை பாராட்டினேன். இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அரசியலாக்கக் கூடாது என தெரிவித்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்த படத்தை தனது ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டு, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘சில நேரங்களில் முதலில் பார்க்கும்போது, ஒரு விடயம் விளையாட்டுத்தனமாகவும், யாரையும் பாதிக்காமல் இருக்கும்போது, அது பலருக்கு அவ்வாறு இருப்பதில்லை. நான் ஒருபோதும் பெண்களுக்கு எதிராக அவமரியாதை செய்தேன் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

நான் வெளியிட்ட ஒரு மீம்ஸுக்கு ஒரு பெண்ணை பாதித்து எரிச்சல் அடைய வைத்திருந்தால் கூட அதற்கு பரிகாரம் தேடுகிறேன். மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய ட்வீட் நீக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers