நடிகர் சங்கத் தேர்தலை நடத்தத் தடை! சங்கங்களின் பதிவாளர் அதிரடி உத்தரவு

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடத்தத் தடை விதித்து, சங்கங்களின் பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2015-2018ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், 6 மாதங்களுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரும் 23ஆம் திகதி சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் களமிறங்க இருந்தன.

ஆனால், அக்கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதி இல்லை என்றும், மாற்று இடத்தை இன்று தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்தத் தடை விதித்து சங்கங்களின் பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியல் இறுதி செய்யவேண்டியுள்ளது. 2017-2018ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்டப் பதிவாளரிடத்தில் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ள நிலையில்,

எந்த வருட உறுப்பினர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. மேலும், 2018 நவம்பரில் இருந்து 6 மாத காலத்துக்குத் தேர்தலைத் தள்ளிவைத்து, கட்டிடப் பணி முடிவடைந்தவுடன் தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதலுக்குக் கோரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேற்படி நீட்டிப்பு காலத்துக்குள் தேர்தலை நடத்தாமல், காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பிறகு அவர்களால் தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது.

இந்நிலையில் சங்கத் தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. எனவே இதுகுறித்துத் தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்