பிக்பாஸ் மதுமிதாவுக்கு உண்மையில் நடந்தது என்ன? கமல்ஹாசன் வரவேண்டும் என கண்ணீர்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான மதுமித பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பின் அதிலிருந்து வெளியேறிய நிலையில், அவர் மீது தனியார் நிறுவனம் புகார் கொடுத்திருப்பது குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது மூன்றாவது சீசனை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், பிரபலங்கள் 15 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

100 நாட்கள் இந்த வீட்டில் தங்கி, அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் மற்றும் மக்கள் அளிக்கும் ஓட்டு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். போட்டியின் விதிமுறைகளை மீறினாலும் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவர்.

அந்த வகையில், இந்த மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா, திடீரென்று கையில் கட்டு போட்ட நிலையில் போட்டியிலிருந்து வெளியேறினார்.

அவர் பிக்பாஸ் விட்டின் உள்ளே தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின, இதற்கு சக போட்டியாளர்கள் செய்த கிண்டல்கள் தான் என்று கூறப்பட்டது.

அதன் பின் வெளியே வந்த பின்பு மதுமிதா மீது புகார் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது, ஆனால் இதை முதலில் மறுத்த மதுமிதா, அதன் பின் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தனியார் நிறுவனம் என் மீது காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரைக் கொடுத்துள்ளது.

இந்தப் புகாரை கொடுப்பதற்கு முன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்களுக்கு வரவேண்டிய செட்டில்மென்டுகளைக் கொடுத்துவிடுகிறோம். இன்வாய்ஸ் மட்டும் அனுப்புங்கள் என என்னிடம் கூறினர்.

நான் என் கணவர் மூலமாக அவர்கள் கேட்டதைக் கொடுத்துவிட்டோம். அப்போது அவர்கள் உங்களுக்கான தொகை விரைவில் வந்துவிடும் என்று கூறி அனுப்பினர். அதன் பின்னர், ஏன் அந்த நிறுவனம் இப்படி ஒரு புகாரை அளிக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.

என்மீது புகார் கொடுத்ததே எனக்குத் தெரியாது. நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கேட்டபோதுகூட அப்படி இருக்காது. வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தியாகத்தான் இருக்கும் என முதலில் நினைத்தேன்.

அதன்பின்னரே வந்த தொடர் அழைப்புகளையடுத்து, எனது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, காவல்நிலையத்தில் விசாரிக்கச் சொன்ன போது, இது உண்மை என்பது தெரியவந்தது.

பத்து வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறேன், ஆனால் என் மிது இதுவரை எந்த ஒரு புகாரும் வந்ததில்லை, அப்படி இருக்கையில் இது எப்படி என்பதே தெரியவில்லை.

இது குறித்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. தனியார் நிறுவனத்திடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது.

மேலும் தனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கண்கலங்கிய படி கேட்டுக்கொண்டார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்