தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
இவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அவர் பத்தாம் வகுப்பு பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு 17 வயதில் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார்.
பல இடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு பின்னர் சினிமா நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்களில் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
தவசி, சாணக்கியா, எல்லாம் அவன் செயல், ஐயா போன்ற திரைப்படங்களில் வடிவேலுவும், கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் எல்லோராலும் ரசிக்கப்படுகிறது.
2008-ல் கிருஷ்ணமூர்த்திக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்த போது அதற்கான முழு செலவையும் வடிவேலு தான் ஏற்று கொண்டாராம்.
அப்போது இந்த நன்றி கடனுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என வடிவேலுவிடம் கிருஷ்ணமூர்த்தி கேட்க, எனக்கு சகோதரன் இருந்தால் நான் இதை செய்திருக்க மாட்டேனா என நெகிழ்ச்சியுடன் வடிவேலு கூறியுள்ளார்.
இதே போல இன்னொரு தடவை மருத்துவமனை செலவுக்கு பணமில்லாமல் கிருஷ்ணமூர்த்தி கஷ்டப்பட்ட போது உறவினர்கள் யாரும் அவருக்கு உதவவில்லை.
வடிவேலு தான் கிருஷ்ணமூர்த்தியை தேடி சென்று பணம் கொடுத்து உதவியதாக அவர் முன்னர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
கிருஷ்ணமூர்த்தி மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் நகைச்சுவை காட்சிகள் காலத்துக்கும் அவரை மக்கள் மனதில் நீங்காமல் வைத்திருக்கும் என கூறினால் அது மிகையாகாது!