இலங்கையில் படப்பிடிப்பின் போது சகோதரனை போல பார்த்து கொண்டார்! உயிரிழந்த பிரபல நடிகர் குறித்து சிம்பு உருக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சுவாமிநாதன் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து உருக்கமான அறிக்கையை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இதில் சுவாமிநாதன் நடிகராகவும் உள்ளார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, தாஸ், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சிலம்பாட்டம், புதுப்பேட்டை போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாமிநாதன் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் கொரோனா தொற்றால் தமிழ் திரையுலகில் நிகழும் முதல் மரணம் இதுவாகும்.

இந்த நிலையில் சுவாமிநாதன் மறைவு தொடர்பாக நடிகர் சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், சுவாமிநாதன் எனக்கு மிகவும் நெருக்கமானவர், மென்மையான மனிதர்.

நட்புக்கு இலக்கணமான சுவாமிநாதன் சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் என்னை நடத்தினார்.

மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்ல முடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

அவர் மகன்களான அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுடன் என்றும் எந்த காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்