S.P.B இறந்தது எப்படி? டிரக்யாஸ்டமி சிகிச்சையை வெளியே சொல்லாதது ஏன்? மகன்-மருத்துவமனை விளக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தது எப்படி, அவருக்கு கொடுக்கப்பட்ட டிரக்யாஸ்டமி சிகிச்சை குறித்து வெளியே சொல்லாதது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவர், அதன் பின் அதில் இருந்து மீண்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டணம் குறித்து தொடர்ந்து புதிய, புதிய தகவல்கள் எல்லாம் வெளியாகின.

இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று எஸ்.பி.பி. மகன் சரண் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆகியோர் பதில் அளித்துள்ளார்கள்.

எக்மோ, உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் இரண்டு விதமான பிரச்னைகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதில் ஒன்று தொற்று. உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். நுரையீரலில் மட்டுமல்லாமல் ரத்தத்திலும் தொற்று நேரடியாக ஏற்படலாம்.

எஸ்.பி.பி. இறப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தீவிரமான தொற்றுக்குரிய அறிகுறிகள் ஏற்பட்டன. 10-ல் 9 தடவை அதற்குரிய மருந்துகள் கொடுத்து குணமாக்கி விடலாம். ஆனால் 10-ல் 1 தடவை எந்தவொரு மருந்து கொடுத்தாலும் வேலை செய்யாது. அதுமாதிரியான தீவிர தொற்று தான் ஆரம்பித்தது.

எஸ்.பி.பி. இறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு சிடி ஸ்கேன் செய்தோம். மூளையில் கொஞ்சம் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது.

எக்மோ சிகிச்சையில் ஏற்படக்கூடிய அறியப்பட்ட பின்விளைவாகும். அந்தப் பின்விளைவால் மூளையில் ரத்தக்கசிவு. இன்னொரு பக்கம் தொற்று தீவிரமாக இருந்தது.

எவ்விதமான ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்தும் சரியாகவில்லை. இந்தத் தொற்றால் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாகச் செயலிழக்க ஆரம்பித்துவிடும். எவ்வளவு சிகிச்சை கொடுத்தும் தொற்றின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது.

இறுதியில் இதயமும் மூச்சுவிடுவதும் முழுவதுமாக நின்றுபோக, மாரடைப்பு ஏற்பட்டுவிடும் எஸ்.பி.பி.க்கும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், எஸ்.பி.பிக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதை வெளியே ஏன் சொல்லவில்லை என்று கேட்ட போது, தொடர் செயற்கை சுவாசம் கொடுக்க முடியாததால் டிரக்யாஸ்டமி செய்யப்பட்டதாகவும் சிகிச்சை செய்யும் முன் எஸ்.பி.பி.சரணிடம் அனுமதி பெற்றோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

டிரக்யாஸ்டமி சிகிச்சை தொண்டை பகுதியில் செய்யும் சிகிச்சை. இதனால் எஸ்.பி.பியால் தற்காலிகமாக பேசமுடியாமல் போகலாம். அதனால் வெளியே சொல்ல வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்த சிகிச்சை செய்யப்பட்டதாக சொன்னால் இனி அவரால் பாட முடியாதா என்று மக்களிடம் அச்சம் வரும் அதனால் வெளியே சொல்லவில்லை என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்