சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் இன்று பல கோடிகளுக்கு அதிபதி

Report Print Thuyavan in தொழிலதிபர்

ஒவ்வொரு மனிதனும் தொடக்கத்தில் பல சோதனைகளை கடந்தே சாதனைகள் செய்கின்றனர்.

அப்படி சாதித்தவர்களில் ஒருவர் தான் திரு. சுபாஷ் கபூர், பேர்ட் ஹைடெக் இந்தியா (Steelbird Hi-Tech India) என்ற தலைக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர், ஆண்டு வருவாய் 200 கோடி.

ஆரம்ப கால வாழ்க்கை

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தன் நான்கு பிள்ளைகளுடன் சுபாஷ் கபூரின் அம்மா ஹரித்துவாரில் புனிதப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அச்சமயம் பார்த்து நாட்டு பிரிவினை ஏற்பட என்ன செய்வதென்று தெரியாமல் இந்தியாவிலேயே தங்கினர்.

பாகிஸ்தானில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் முக்கியக் குடும்பமாக வாழ்ந்தவர்கள், நாட்டு பிரிவினால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பாத்திரம், துணி, நகை, விவசாயம் போன்ற பலவகையான தொழிலில் ஈடுபட்டு வந்த சுபாஷ் கபூரின் குடும்பம், வறுமையால் திண்டாடியது.

பசியால் வாடிய அவருக்கு அக்காலத்தில் பள்ளி படிப்பிலும் நாட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டதாம்.

பாகிஸ்தானிலிருந்து எப்படியோ இவரது தந்தையும் தப்பி வந்துவிட குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து சிறுசிறு வேலைகளை செய்து வந்தனர்.

தத்தளிக்கும் சமயத்திலும் தளராத முயற்சி

பல ஆண்டுகள் சிரமத்துக்கு பின்னர் டெல்லி சென்றவர்கள் சிறு தொழில் செய்ய முடிவெடுத்தனர்.

இதன்படி சுபாஷின் தந்தை தன் மனைவியின் நகைகளை விற்று சிறுதொழில் ஒன்றை தொடங்கினார், உப்பு விற்பதற்காக துணிப்பைகள் செய்யும் தொழில்.

“அவர் தைலி ஹவுஸ் என்று நிறுவனத்துக்குப் பெயரிட்டார். 1 கிலோ, 2.5 கிலோ பிடிக்கும் பைகளைத் தயாரித்தோம். 100 பைகளை 4 ரூபாய்க்கு விற்றோம். வெற்றிகரமாக தொழில் மாறியது,” என்கிறார் சுபாஷ்.

சுபாஷ் துணியை நறுக்கும் நேரத்தில், அவரது சகோதரர்கள் அதைத் தைத்தல் அச்சிடுதல் போன்ற பணிகளைச் செய்வார்களாம்.

ஒரு பைக்கு 25 பைசா லாபம் கிடைத்த போது அவரது நண்பர் வடிகட்டிகள் செய்யும் யோசனையைத் தந்தாராம்.

ஆரம்பத்தில் சுமார் 12 வடிகட்டிகளைச் செய்து கரோல் பாக்கில் உள்ள ஓரியண்டல் ஆட்டோ சேல்ஸ் கடைக்குக் கொடுத்தனர்.

பின்னர் கஷ்மீரி கேட்டில் இருக்கும் ஹன்ஸ் ஆட்டோ ஏஜென்சிக்குச் சென்று எண்ணெய் வடிகட்டிகளுக்கு ஆர்டர் வாங்க முனைந்தார். அந்த கடை உரிமையாளர் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு கடுமையாக நடந்துகொண்டார் என்று நினைவு கூர்கிறார் சுபாஷ்.

1963ல் சுபாஷ் ஸ்டீல்பேர்ட் நிறுவனத்தை தன் குடும்பத்தினரை பங்கு தாரராகக் கொண்டு உருவாக்கினார். “அடுத்த இரு ஆண்டுகளில் ட்ராக்டர்களுக்குத் தேவையான 280 வகை எண்ணெய் வடிகட்டிகளைத் தயார் செய்தார்.

இந்நிலையில் அரசு தலைக்கவசம் அணவிதை கட்டாயமாக்கிவிட, தலைகவசம் தயாரிக்கும் ஐடியா உதித்துள்ளது.

இதன்படி உற்பத்தியை பெருக்க, தேவை அதிகம் இருந்ததால், ஒரே நாளில் எனக்கு 2.5 லட்ச ரூபாய் கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் சுபாஷ்.

அந்த 2.5 லட்சத்தையும் செய்தித்தாள், தூர்தர்ஷன் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தினார். அதனால் ஸ்டீல்பேர்ட் தலைக்கவசங்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது.

1980-ல் மாயாபுரியில் ஒரு ஏக்கர் நிலத்தில் தொழிலகம் ஒன்று அமைத்தார். இருப்பினும் இந்த வெற்றிக்கதையில் சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.

அவரது தம்பி ரமேஷ் தொழிலில் இருந்து பிரிந்துபோன பின்பு மாயாபுரி தொழிலகம் எரிந்துபோனதாம். சற்றும் பின்வாங்காமல், வங்கியில் கடன்பெற்று அதைச் சமாளித்தார் சுபாஷ்.

தன் காதல் மனைவியான லலிதா தொழிலுக்கு மிகவும் உறுதுணையாய் இருப்பதாகவும், ராஜிவ், அனாமிகா என இரு வாரிசுகள் தமக்கு இருப்பதாகவும் கூறுகிறார்.

இளமை காலத்தில் கடின நாட்களை சந்தித்த அவருக்கு இப்போது பேரப்பிள்ளைகுளுடன் விளையாடி காலத்தை களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என மனமகிழ்கிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்