22 ரூபாயில் தொடங்கி இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
498Shares
498Shares
ibctamil.com

வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

வசந்த் & கோவின் நிறுவனர் எச்.வசந்தகுமார் (67) இவர் கடந்த 1950ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.

பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த வசந்தகுமார் பின்னர் தனது பட்டப்படிப்பை கல்லூரியில் படிக்காமல் அஞ்சல் வழியில் மேற்கொண்டார்.

படித்து கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக சேர்ந்த வசந்தகுமார் அங்கு எட்டு வருடங்கள் பணிபுரிந்தார்.

அங்கு வீட்டு பொருட்கள் வியாபாரத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் கற்று கொண்டதுடன், தனது வேலையை ராஜினாமா செய்தார்.

பின்னர், தனியாக தொழில் தொடங்க முடிவெடுத்து, நண்பரின் உதவியை நாடினார்.

ஆறு மாதத்தில் ரூ.8000 நண்பருக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வசந்தகுமார் நண்பரின் கடையை வாங்கினார்.

1978ல் அந்த கடைக்கு வசந்த் & கோ என பெயர் வைத்தார். கடையின் முதல் பொருளை வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த அவருக்கு சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த திருப் பக்தவச்சலம் என்னும் நபர் 22 ரூபாய் கொடுத்தார்.

70களில் 22 ரூபாய் என்பது மிக பெரிய பணமாகும்.

அதன் பின்னர் அயன் பாக்ஸ் போன்ற சிறிய பொருளில் விற்பனையை ஆரம்பித்த வசந்த் & கோ பின்னர் தொலைகாட்சி பெட்டி, வாட்டர் ஹீட்டர்ஸ், குளிர் சாதன பெட்டி, ரேடியோ, மின் விசிறி, மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது.

ஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும் - வசந்தகுமார்

சாம்சங், சோனி, எல்.ஜி, பேனசானிக் பிலிப்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை வசந்த் & கோவில் தொடங்கியது.

அதன் பின்னர் வசந்த் & கோவின் வியாபாரம் சூடு பிடிக்க இன்று தமிழகம், பாண்டிசேரி, கேரளா மாநிலங்களில் 64 கிளைகளுடன் இயங்கும் இந்நிறுவனத்தில் 1000 பேர் பணி புரிகிறார்கள்.

இன்று இந்த நிறுவனத்தின் விற்பனை 900 கோடியை தாண்டியுள்ளது.

குறைந்த வருவாய் ஈட்டுபவர்களும் எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதற்காகவே தவணை முறையில் பணம் கட்ட சொல்லி பொருட்களை விற்கிறேன் - எச்.வசந்தகுமார்

ஒரு சமயம் மற்ற நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வசந்த் & கோ தயாரித்த மிக்ஸி, மின் விசிறி போன்றவற்றை வசந்தகுமார் தயாரித்தார்.

ஆனால் அது மக்களிடத்தில் வரவேற்பை பெறாத காரணத்தினால் அதை நிறுத்தி விட்டு மற்ற நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்வதை அவர் தொடர்ந்தார்.

தமிழ்நாட்டின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் வசந்தகுமாருக்கு தனது வியாபாரத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்