நடிகர் விக்ரமின் சம்பந்தி: கோடிகளில் புரளும் சாதனை தமிழன்.

Report Print Abisha in தொழிலதிபர்
277Shares

சுயமாக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். பல தோல்விகள் இடையூராக இருந்தாலும் ஒற்றை வீரனாய் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சில தொழிலதிபர்களில் ஒருவர் தான் "கவின்கேர்" நிறுவனத்தின் நிறுவனர் திரு. சி.கே.ரங்கநாதன் அவர்கள்.

கனவுகளை துரத்தும் இளைஞனாக வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு அப்போது 22 வயதே. 80-களில் தான் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் சேமிப்புப் பணத்தைக் கொண்டு சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே இவரது செவிகளுக்கு ஒலித்த தாரக மந்திரமாகும்.

தந்தையை இழந்த இவருக்கு உடன் பிறந்தவர்கள் 5 பேர் ஆகும். குடும்பத் தொழில் அவரது மூத்த சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவது என்ற ஒரு கடினமான முடிவை ரங்கநாதன் எடுத்தார்.

34 ஆண்டுகளுக்கு முன்பு, சிறு தொழிலாக, சிக் ஷாம்புவை தயாரிக்கத் தொடங்கினார். இதுதான், கவின்கேர் பிரைவேட் லிமிடெட் (Cavinkare Private Limited) என்ற பெயரில் 1450 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருமாறியது.

அழகு சாதனப் பொருட்கள், பால்பொருட்கள், ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட வெவ்வேறு பலன்களை அளிக்கக் கூடிய பொருட்களை தயாரிக்கும் தொழிலில் கால் பதித்து அதில் வெற்றியும் கண்டார்.

எளிமையாக அவர் தொடங்கிய துவக்கத்தில், தமது சேமிப்பில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவுடன், ரங்கநாதன் முதலில் தங்குவதற்கு ஓர் இடம் பார்த்தார்.

அந்த இடம் அவரது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில்தான் இருந்தது. “ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டின் மாத வாடகை 250 ரூபாய் ஆகும். ஒரு கெரசின் ஸ்டவ், விரித்து மடக்கக்கூடிய கட்டில், தெருக்களில் சுற்றி வருவதற்கு ஒர் சைக்கிளும் வாங்கி வாழ்ந்து வந்தார்.

ஆரம்ப காலத்தில், சகோதரர்களுக்குப் போட்டியாக ஷாம்பூ தயாரிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

ஒரு கோழிப்பண்ணை தொடங்குவது என்பது உட்பட சில யோசனைகளை திட்டமிட்டிருந்தார். ஆனால், தமக்கு தெரிந்தது ஷாம்பூ தயாரிப்பு மட்டும்தான் என்பதை கூடிய விரைவிலேயே அவர் உணர்ந்தார்.

புதுச்சேரியில் எளிதாக லைசென்ஸ் வாங்கி, பின்னர் அங்கேயே தமது தொழிற்சாலையை துவங்கினார். சின்னி கிருஷ்ணன் எனும் தம் தந்தையின் பெயரில் இருக்கும் ஆங்கில எழுத்துக்களான (CHIK) சிக் என்ற பெயரை தமது ஷாம்பூ தயாரிப்புக்கு பெயர் வைத்தார்.

இவரது நிறுவனம் வெறும் 4 தொழிலாளர்களுடன், புதுச்சேரியின் கன்னி கோயிலில் தொடங்கியது. மாதம் 300 ரூபாய் வாடகையில், 3,500 ரூபாய் மதிப்புள்ள இயந்திரத்துடன் தொழிலைத் தொடங்கினார். இன்றைக்கு கடல் கடந்தும் அவரது தொழில் விரிவடைந்திருக்கிறது என்றால் இது சரித்திர சாதனையில்லையா ?

கவின்கேரின் பொருட்கள் இப்போது, இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன.

கவின்கேர் பங்களாதேஷ் பிரைவேட் லிமிடெட், கவின்கேர் லங்கா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு வெளிநாட்டு துணை நிறுவனங்களையும் கவின்கேர் கொண்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் சேர்த்து 4000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

தொழில் ரகசியம்

1983-ல் சிக் ஷாம்பூவை தொடங்கியபோது, முட்டை சேர்க்கப்பட்ட ஷாம்பூவை பாக்கெட் ஒன்றுக்கு 90 பைசா விலையில் அறிமுகம் செய்தார்.

வெல்வெட் ஷாம்பூவை விட 15 பைசா அதிகம் இருந்தது. “ஒரு விநியோகஸ்தர் என்னிடம், ‘இது நல்ல வியாபார உத்தி அல்ல’ என்றார். எனவே, உடனடியாக ஷாம்பூ விலையை 75 பைசாவாகக் குறைத்து அதில் பட்டொளி வீசி பறக்க துவங்கினார்.

எந்த ஒரு பிராண்டின் 5 காலி ஷாம்பூ பாக்கெட்களைக் கொடுத்து, ஒரு சிக் ஷாம்பூ பாக்கெட் இலவசமாகப் பெறலாம் என்று அறிவித்தார். இது சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டம் வெறித்தனமான வெற்றியைக் கொடுத்தது. வெல்வெட் ஷாம்பூவை தவிடுப்பொடியாக்கியது.

அப்போது கோத்ரெஜ் நிறுவனம் வெல்வெட் ஷாம்பூவின் விநியோகஸ்தராக இருந்தது. நான், அந்த மிகவும் திறன் வாய்ந்த குழுமத்தை எதிர்த்துப் போராடினேன். என்னுடைய திட்டம் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்த பத்து மாதங்கள் கழித்து அந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டேன்.” எதிரியைத் தோற்கடிக்கும் பெரும் கதாநாயகனாக மாறினார் திரு. சி.கே.ஆர்.

90-களில் மீரா ஹெர்பல் ஹேர்வாஷ் பவுடரை ரங்கநாதன் அறிமுகம் செய்து, பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹெர்பல் ஷாம்பூ, ஸ்பின்ஷ் பெர்ஃப்யூம், இண்டிகா ஹேர் டை மற்றும் ஃபேர்எவர், ஃபேர்னஸ் க்ரீம் என அறிமுகம் செய்ய தொடங்கினர்.

ஒரு சலூன் கடைக்கு சென்றால், அல்லது உணவகத்துக்கு சென்றால் அங்கிருக்கும் சுற்றுச்சூழலை உணர்ந்து அதை வாய்ப்பாக பார்த்து தற்போது இயங்கி வரும் க்ரீன் ட்ரென்ட்ஸ் சலூன் மற்றும் சி.கே பேக்கரி போன்றவற்றில் நுழைந்து வெற்றியும் பெற்றார்.

ஓயாமல் உழைத்து வெற்றி கனிகளை பறித்தவர். தற்போது ஓய்வெடுக்காமல் குழந்தைகளான அமுதா, மனு மற்றும் தரணி மூவரையும் சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சியில் இறங்கி அழகுபார்க்கிறார்.

மேலும் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, அதன் பின்னர், கவின்கேர் நிறுவனத்தை தன்னுடைய வாரிசாக நடத்தப்போவது யார் என்பதையும் ரங்கநாதன் முடிவு செய்ய உள்ளார்.

“அவர்களில் திறன் வாய்ந்தவர், தலைமைப் பொறுப்பை ஏற்பார். மற்ற இருவர் தலைமைப் பொறுப்பு ஏற்பவரின் வழியைப் பின்பற்றுவார்கள்,” என்று உறுதியாக தெரிவிக்கிறார் ரங்கநாதன்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்