ஓநாய்களால் காட்டில் வளர்க்கப்பட்ட மனிதர்: நிஜ டார்ஜானின் வாழ்க்கை

Report Print Kabilan in ஐரோப்பா

ஸ்பெயின் நட்டைச் சேர்ந்த மார்கோஸ் ரோட்ரிகஸ் பாண்டோஜா என்பவர், 12 ஆண்டுகள் காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 72 வயதான மார்கோஸ் ரோட்ரிகஸ் பாண்டோஜா, தனது 3வது வயதில் தாயை இழந்தார். அதன் பின்னர், அவரது தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.

இதனால் தனிமையில் இருந்த மார்கோஸ், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது ஒருநாள் ஆடு மேய்ப்பவர் ஒருவர் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அவரிடமிருந்து சில வேலைகளையும், கருவிகளை உருவாக்குவதையும் கற்றுக் கொண்டார் மார்கோஸ். அதனைத் தொடர்ந்து, மார்கோஸுக்கு 7 வயது இருக்கும் போது அவரை ஆதரித்த ஆடு மேய்ப்பவரும் இறந்துவிட்டார்.

இந்நிலையில், அலைந்து திரிந்த மார்கோஸ் காட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு ஓநாய் ஒன்று அவரை அன்புடன் அரவணைத்துள்ளது. தனது குட்டிகளைப் போலவே மார்கோஸையும் பார்த்துக் கொண்டது.

மார்கோஸுக்கு பெர்ரி, காளான்களை சாப்பிட சொல்லி பழக்கிய அந்த ஓநாய், விஷ உணவுகளை சாப்பிடக் கூடாது என எச்சரிக்கும். மார்கோஸ் ஓநாயின் குட்டிகளிடம் ஒன்றாக விளையாடி மகிழ்ந்துள்ளார்.

அவருக்கு விலங்குகளின் மொழி புரியத் தொடங்கியது. அவர் குரல் எழுப்பினால் எங்கிருந்தாலும் ஓநாய்கள் அவரிடம் வந்து விடும் அளவுக்கு அவைகளுடன் நெருக்கமாகியுள்ளார்.

இது குறித்து மார்கோஸ் ரோட்ரிகஸ் கூறுகையில், ‘ஓநாய்கள், மான்கள், பாம்புகள் என்று பல விலங்குகளும் நானும் ஒரே குகையில் தங்கியிருப்போம். தூங்கும்போது, பலமுறை என் மீது பாம்புகள் ஏறிப் போயிருக்கின்றன.

ஒருநாளும் எந்த விலங்காலும் நான் ஆபத்தைச் சந்தித்ததே இல்லை. என் வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்தபோது, 19 வயதில் ராணுவ வீரரால் மீட்கப்பட்டேன். நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டேன்.

மொழி புரியவில்லை, மனிதர்களின் வாழ்க்கை முறை பிடிக்கவில்லை. காட்டுக்குள் ஓடிவிடலாம் என்று நினைக்காத நொடி இல்லை. ஆனால், என்னை நிரந்தரமாக காட்டில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.

அடிக்கடி ஓநாய் அம்மாவையும், ஓநாய் தம்பிகளையும் பார்க்க காட்டுக்குள் சென்றுவிடுவேன். பிரத்யேக ஒலி எழுப்பினால், அவை அன்புடன் ஓடிவந்து என்னைக் கட்டிப் புரளும். காலப்போக்கில் என்னிடம் மனிதர்களின் மணமும், குணமும் வந்துவிட்டதால், காட்டில் குரல் கொடுத்தால் ஓநாய்கள் வருவதில்லை.

பதில் குரல் மட்டுமே கொடுத்தன. மனிதர்களால் வசிக்க முடியாத காட்டில் நான் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தேன். ஆனால், மனிதர்களுடன் வசிக்க ஆரம்பித்தபோதுதான் ஏமாற்றப்பட்டேன், சுரண்டப்பட்டேன், வஞ்சிக்கப்பட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் இவரிடம் இருந்து பல தகவல்களை திரட்டி, ஆவணப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers