இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது பெரும் பாதிப்பினை ஏறப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இத்தாலியில் மாலை 6 மணிக்கே உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து ரோம்,ஜெனோவா, பலேர்மோ, ட்ரைஸ்டே, டுரின் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளையும் அவர்கள் வீசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்ட முதல் முழு ஊரடங்கு அமைதியாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு மிகுந்த எதிர்ப்பினை சந்தித்துள்ளது.
சிறு வணிக நிறுவனங்கள் தாங்கள் தற்போதுதான் முதல் ஊரடங்கு பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாகவும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தங்களை முழுவதும் திவாலாக்கிவிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
டுரின் பகுதியில் உள்ள ஒரு பிரபல பல்பொருள் அங்காடியை போராட்டக்காரர்கள் சூரையாடியு்ளளனர். காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.