மீளும் நினைவுகள்! பெண்கள் இல்லத்தின் 22வது ஆண்டு விழா நிகழ்வுகள்

Report Print Suman Suman in நிகழ்வுகள்
64Shares
64Shares
ibctamil.com

தென்னிந்திய திருச்சபை புனித பவுல் பெண்கள் இல்லத்தின் 22வது ஆண்டு விழா நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

முறிகண்டி பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டும், மிக வறுமையில் வாழ்ந்த சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஜேர்மன் தேசத்தின் நிதி உதவியுடன் குறித்த பெண்கள் இல்லம் செயற்பட்டு வந்தது.

1995ம் ஆண்டு 07.07 அன்று முறிகண்டி தென்னிந்திய திருச்சபை வளாகத்தில் 9 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் இல்லம், 2009ம் ஆண்டு இறுதி யுத்த இடம்பெயர்வு வரை தொடர்ந்தும் இயங்கி வந்தது.

14 வருடங்களில் 100 மேற்பட்ட பிள்ளைகள் குறித்த பெண்கள் இல்லத்தில் கல்வி பயின்றனர். இறுதியாக 55 பிள்ளைகள் தமது கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் இறுதி யுத்தம் இடம்பெற்றதை அடுத்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் தமது பெற்றோருடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றுக்கொள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அவர்களை நீக்கி கற்றலிற்கு உதவியாக இருந்த குறித்த பெண்கள் இல்லம், இன்று 22ஆண்டுகளை கடந்துள்ளது.

குறிதத் பெண்கள் இல்லத்தின் கட்டடங்கள் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் மீள் குடியேற்றத்தின் பின்னர் தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு 14 வருடங்களாக கல்வி பயின்ற பிள்ளைகள் இன்று நன்றி செலுத்தும் முகமாக ஒன்று கூடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

தென்னிந்திய திருச்சபையின் கிளிநொச்சி பிராந்திய குருவாகிய வண பிதா ஜோன் தேவசகாயம் தலைமையிலான மத குருமார், தென்னிந்திய திருச்சபையில் திட்டப்பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெற்ற எஸ்.ரட்ணவேல், பெண்கள் இல்லபாதுகாவலர்கள், கல்வி பின்ற பிள்ளைகள் குறித்த ஒன்று கூடலில் இணைந்து கொண்டனர்.

யுத்தம் காரணமாக குறித்த இல்லத்தில் கல்வி கற்று உயிர் நீத்தவர்களிற்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு விசேட வழிபாடும் இடம்பெற்றது.

தொடர்ந்து பெண்கள் இல்லத்தில் தாம் அனுபவித்த விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

வன்னி பகுதியில் இந்த பெண்கள் இல்லத்துடன் சலோம் நகர் ஆண்கள் இல்லம், மாங்குளம்ஆண்கள் இல்லம் ஆகியன தென்னிந்திய திருச்சபையினால் நிர்வகிக்கப்பட்டு பலர் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் மாதங்களில் ஆண்கள் இல்லங்களில் கல்வி பயின்றவர்களிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.​

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்