திருப்பரங்குன்றம் முருகனின் பங்குனி பெருவிழா நாளை ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனி பெருவிழா மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வருகிற 4-ந்திகதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 25-ந்திகதி கைப்பாரம் நடைபெற உள்ளது.

இதில் கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிகஎடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான் தெய்வானையை பக்தர்களும், கோவில் சீர்பாத தாங்கிகளும் தங்களது உள்ளங்கையில் கைப்பாரமாக சுமந்து தலைக்கு மேலே தூக்கி ஓட்டமும், நடையுமாக செல்லுவது தனி சிறப்பாகும்.

கைப்பாரத்தையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படும் என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி பங்குனி உத்திரமும், 31-ந்திகதி சூரசம்ஹார லீலை நடைபெற உள்ளது. அன்றையதினம் ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 1-ந்திகதி முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் இடம்பெற உள்ளது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக 2-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.

இதில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மேலும் சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்திகதி மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர்வலம் இடம்பெறும். அதனை தொடர்ந்து திருவிழாவின் நிறைவு நாளான 4-ந்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்