கடைசி நொடியில் ஜேர்மனி காட்டிய அதிரடி: சுக்கலானது ஸ்வீடன் கனவு

Report Print Arbin Arbin in கால்பந்து

உலகக் கிண்ணம் கால்பந்துப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் இடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி திடீர் வெற்றியை சுவைத்தது.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜேர்மனியின் கோலடிக்கும் முயற்சிகளை லாவகமாக தடுத்து வந்தது ஸ்வீடன்.

இந்த நிலையில், 30வது நிமிடத்தில் அழகான கோலைப் போட்டது ஸ்வீடன். விக்டர் கிளீசன் எடுத்துக் கொடுக்க வலது காலால் அதை உதைத்து கோலாக்கினார் ஓலா டோய்வோனன்.

முதல் பாதியில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில் 2வது பாதி ஆட்டத்தில் ஜேர்மனி ஒரு கோலடித்தது.

47வது நிமிடத்தில் மார்கோ ரூயஸ் அபாரமான கோலடித்து சம நிலைக்குக் கொண்டு வந்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

மாறி மாறி இரு தரப்பும் கோல் முயற்சிகளை தடுத்து விட்டன. 2ம் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்திற்கு முன் வரை இது டிராவில்தான் முடிவதாக இருந்தது.

ஆனால் 94வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் டோனி க்ரூஸ் அதிரடியாக கோலடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து விட்டார்.

ரசிகர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. சாம்பியன் போல ஆடிய ஜேர்மனி கடைசி நேரத்தில் வெற்றியைத் தட்டிப் பறித்து ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்து விட்டது.

முன்னதாக எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் தென்கொரியாவை மெக்சிகோ வீழ்த்தியது. எப் பிரிவில் இதுவரை நடந்த போட்டிகளில் மெக்சிகோ 1 - 0 என ஜேர்மனியை வென்றது.

ஸ்வீடன் 1 - 0 என தென்கொரியாவை வென்றது. இந்த உலக் கிண்ணம் தொடரில் எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜேர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது மெக்சிகோ.

இரண்டாவது ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. இதுவரை பிரேசில் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை உலகக் கிண்ணம் வென்றுள்ளது. இந்த முறை தொடர்ந்து 2வது முறையாக கிண்ணத்தை வெல்வதுடன் பிரேசில் சாதனையை சமன் செய்யும் இலக்குடன் ஜேர்மனி களமிறங்கியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்