சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டோட்டன்ஹாம்!

Report Print Kabilan in கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2வது கட்ட அரை இறுதியில் வெற்றி பெற்றதன் மூலம், முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு டோட்டன்ஹாம் அணி முன்னேறியுள்ளது.

நேற்று முன்தினம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது கட்ட அரையிறுதிப் போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் அஜாக்ஸ் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணி தரப்பில் டி லைட் கோல் அடித்தார். அதன் பின்னர் 35வது நிமிடத்தில் அதே அணியின் ஹக்கிம் ஸியெக் ஒரு கோல் அடித்தார். இதனால் அஜாக்ஸ் அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால், இரண்டாம் பாதியில் டோட்டன்ஹாம் அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அந்த அணி வீரர் லூகாஸ் மோரா 55 மற்றும் 59வது நிமிடங்களில் கோல் அடித்து சமநிலைபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கூடுதல் நேரத்தின் 3வது நிமிடத்தில் லூகாஸ் மோரா மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் டோட்டன்ஹாம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் கடந்த 30ஆம் திகதி நடந்த முதல் அரையிறுதி போட்டியில், டோட்டன்ஹாம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

அந்தப் போட்டி டோட்டன்ஹாம் அணியின் சொந்த மைதானத்தில் நடந்தது. ஆனால், நேற்று முன்தினம் நடந்த 2வது அரையிறுதியில் அஜாக்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்றது. அதனால் இரு அணிகளின் கோல்கள் விகிதம் 3-3 என சமநிலை வகித்தது.

எனவே வெளி மைதானத்தில் அடித்த கோல்களின் அடிப்படையில் டோட்டன்ஹாம் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஜூன் 1ஆம் திகதி மாட்ரிட் நகரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில், டோட்டன்ஹாம் அணி லிவர்பூல் அணியை எதிர்கொள்கிறது. லிவர்பூல் அணி ஏற்கனவே அரையிறுதியில் பார்சிலோனா அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

GETTY IMAGES

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்