சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் 50,000 ரூபாய் பரிசு

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் 50,000 ரூபாய் பரிசு

பிரான்ஸ் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் அவர்களுக்கு 50,000 ரூபாய் வரை பரிசு வழங்க அந்நாட்டு மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மது அருந்துவதை விட புகைப்பிடிப்பது உயிருக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். இதைவிட, கர்ப்பிணியாக உள்ள பெண்கள் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படுவதை தொடர்ந்து அவர்களின் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் ஆபத்து ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடிப்பதால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு வளர்ச்சி தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதுடன், கரு கலைந்து விடவும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக பிரான்ஸில் கர்ப்பிணியாக உள்ள சுமார் 17.8 சதவிகித பெண்கள் சிகரெட் பிடிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதாவது, ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் நாட்டில் தான் சிகரெட் பிடிக்கும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பிரான்ஸ் நாட்டு சுகாதார அமைச்சகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புள்ளிவிபரத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் செயல்பட்டு வரும் 17 பொது மருத்துவனைகள் ஒரு அதிரடி திட்டத்தை தொடங்கியுள்ளன.

அதாவது, இந்த மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் இருந்து, அதனை விட்டுவிட விருப்பம் தெரிவித்தால் 300 யூரோ(49,872 இலங்கை ரூபாய்) வரை பரிசு கூப்பன்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு பரிசோதனைக்கு வரும்போதும் 20 யூரோ வரை பரிசு கூப்பன் வழங்கப்படும்.

இதுபோன்று 36 மாதங்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த பொது மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளன.

எனினும், இந்த பரிசோதனையில் பங்கேற்கும் கர்ப்பிணி பெண்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதலில், கர்ப்பிணி பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அவர்கள் நான்கரை மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்க வேண்டும்.நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 சிகரெட்டுகள் வரை பிடிப்பவராக இருக்க வேண்டும்.

இவை அனைத்திலும் விட, இந்த பரிசோதனையில் பங்கேற்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ‘சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்’ என்ற உண்மையான விருப்பம் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பரிசோதனை மூலமாக 20 யூரோ மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டு, பரிசோதனையின் முடிவு வரை சுமார் 300 யூரோ மதிப்புள்ள பரிசு கூப்பன்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இந்த பரிசு கூப்பன்களை நகரங்களில் உள்ள எந்த கடைகளிலும் பயன்படுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை ஷொப்பிங் செய்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments