இப்படி ஒரு அதிசயமான பாலத்தை பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Report Print Maru Maru in பிரான்ஸ்

கடலாக காணப்பட்டு வெள்ளம் வடிந்த பிறகு, வெளிப்படும் ஒரு அதிசய கடல் பாலம் இந்த டு கோய்ஸ்.

கடல் நீரோட்டத்தில் மூழ்கும் இந்த தரைப் பாலம், போர்க்னீப் விரிகுடா கடலில் அமைக்கப்பட்டுள்ளது.

இது நோர்மோடியர் என்ற தீவை பிரான்சின் நிலப்பகுதியோடு இணைக்கப் பயன்படுகிறது.

இந்த பாலத்தை கடந்தே தீவில் உள்ளவர்கள் பிரான்ஸின் நிலப்பகுதிக்கு பொருள்கள் வாங்க செல்கின்றனர். அதுபோல, பிரான்ஸிலிருந்து தீவுக்குள் செல்பவர்களும் கடக்கின்றனர்.

இதில் உள்ள ஒரு பெரிய சிக்கல் நினைத்தபோதெல்லாம் இந்த பாதையை கடந்துவிட முடியாது, அந்த பாதையில் உள்ள அதிசயமும் வினோதமும் அதுதான்.

ஒருநாளைக்கு இரண்டு முறை மட்டுமே வெளிப்படும் இந்த பாதை கடல் வெள்ளம் மூடியிருக்கும் பொழுது பயன்படுத்த முடிவதில்லை. வடிந்த பிறகு, நடப்பதற்கும், கார்கள் உட்பட்ட வாகன போக்குவரத்துக்கும் இது பயன்படுகிறது.

இந்த பாதை நாள் முழுதும் 1.3 மீ. முதல் 4 மீ. உயரம் வரை கடல் நீரால் மூடப்பட்டு கடலின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது.

ஆனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் 1 அல்லது 2 மணி நேரத்துக்கு இருபுறமும் கடல் உள்வாங்கிக்கொண்டு மேடான பாலம் வெளிப்படுகிறது.

இந்த பாலம் 4.5. கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதுபோன்ற கடல் மூடி விலகும் பாலம் கொரியாவில் உள்ள ஜிண்டோ கவுண்டியில் உள்ளது என்றாலும் அது இந்த டு கோய்ஸ் அளவுக்கு நீளமானது அல்ல.

இந்த பாலம் 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது கடற்கரையை ஒட்டி அணைக்கரையாகவும் மிகநீளமாகவும் முன்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் நோர்மோடியர் தீவுக்கு படகில் மட்டுமே செல்ல முடிந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கடல் வற்றி சேற்றுநிலமாக தோன்ற அதில் மனிதர்களும் விலங்குகளுமாக சேர்ந்து இந்த கரடுமுரடான பாதையை தீவுக்கு வழியாக அமைத்தனர். 1701 ம் ஆண்டில்தான் முதன்முதலாக இந்த பாதை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க்னீப் விரிகுடாவில் இந்த பகுதி ஒரு திட்டு பீடபூமியாக இருந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியிலிருந்து நீரோட்டங்கள் அந்த பீடபூமியை தாக்கி, வண்டல் படிவுகளை விளைவித்துள்ளன.

அதோடு மணல் மற்றும் உருளை கற்களையும் கொட்டி பரப்பி ஒரு சாலையாக சுமார் 1840 ல் ஏற்படுத்தியுள்ளனர். பிறகு 1971 ல் தான் நோர்மோடியர் தீவை இணைக்கும் ஒரு பாலத்தை அந்த சாலையை ஒட்டியே அமைத்தனர்.

1986 ம் ஆண்டிலிருந்து இந்த பாலத்தில் ஓட்டப் பந்தயம் ஆண்டுதோறும் நடக்கிறது. 1999 ல் இதில் சைக்கிள் பந்தயமும் நடந்தது.

கடல் அலைகள் இருபுறமும் வந்து இந்த பாலத்தை மூடும் காட்சி ஒரு இயற்கை தரிசனம். நூற்றுக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் இந்த பாலத்தையும் தீவையும் காண வருகின்றனர். மகிழ்ச்சி பெறுகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments