பிரான்ஸ் சீக்கியர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் வாழும் சீக்கியர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு, வெகு நீண்ட காலமாக தாங்கள் சந்தித்துவரும் தலைப்பாகை பிரச்சனை குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், தாங்கள் அடையாள ஆவணங்களுக்காக ஒவ்வொருமுறை விண்ணப்பிக்கும்போதும் புகைப்படம் எடுப்பதற்காக தங்கள் தலைப்பாகையை அகற்றுமாறு வற்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி பேருந்துகளில் பயணிக்கும்போது ஒவ்வொருமுறையும் அடையாள அட்டையிலுள்ள புகைப்படத்துடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தங்கள் தலைப்பாகையை அகற்றும்படி வற்புறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தங்கள் மத உணர்வுகளை மீண்டும் மீண்டும் புண்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீக்கியர்களுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் உள்ள உறவு மறக்கப்பட்டுவிடக்கூடாது என்று கூறும் அவர்கள், சீக்கியரான Maharaja Ranjit Singh க்கும் King Louis Philippe I க்கும் இருந்த நட்பையும், முதல் உலகப் போரின்போது சீக்கியர்கள் பிரான்ஸ் சுதந்திரத்திற்காகப் போராடும்போது தலைப்பாகை ஒரு பிரச்சினையாக இல்லை என்பதையும் தெரிவித்துள்ளதன்மூலம் வரலாற்றில் நிகழ்ந்தவற்றை நினைவு படுத்தியுள்ளனர்.

துரதிருஷ்டவசமாக இன்று சீக்கியர் என்று அடையாளம் காணப்படுதல் பாதுகாப்பான ஒன்றாக இல்லையென்றும், 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிட்டி பிரான்ஸ் நாட்டு சீக்கியர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது என்றும் ஆனால் பிரான்ஸ் அரசு இன்னும் தனது சட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அடையாள ஆவணங்களில் உள்ள புகைப்படங்களில் தலைப்பாகை போன்ற தலையை மறைக்கும் எந்த மறைப்பும் இருக்கக்கூடாது என்ற 2006ஆம் ஆண்டு விதியினால் பிரான்சில் தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டே வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிட்டி தனது ஆதரவைத் தெரிவித்தும்கூட தங்கள் மத உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்திவரும் இந்த நடவடிக்கைகள் குறித்து இந்திய அதிகாரிகள் பிரான்ஸ் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டு சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதியான F Hollande இந்தியா வந்த போதும் இந்த தலைப்பாகை பிரச்சினை எழுப்பப்பட்டது என்பதும், ஆனால் இதுவரை அதற்கு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...