முரண்பாடுகள் ஆரம்பம்: பிரான்சின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ரசாயன பொருட்களை தனது மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இணைந்து தாக்குதல் நடத்தி ஒரு வாரம் கூட ஆகாத நிலையிலேயே நட்பு நாடுகளுக்குள் கருத்து வேறுபாடுகள் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பத்து நாட்களுக்குமுன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவிலிருந்து படைகளை வாபஸ் பெற முடிவு செய்ததாகவும் அவரை படைகளை திரும்பப் பெறவேண்டாம் என்று தான் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் சாரா சாண்டர்ஸ் “அமெரிக்காவின் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை, அமெரிக்க அதிபர், அமெரிக்க படைகள் எவ்வளவு சீக்கிரம் நாடு திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்ப வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்கள் ஐ.எஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கவும் அது மீண்டும் தலையெடுக்காமல் தடுக்கவும் உறுதி எடுத்துள்ளோம்.

அத்துடன் எங்கள் நட்பு நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் பங்கிற்கு இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமைதான் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இணைந்து, சிரிய பொதுமக்கள்மீது ரசாயனத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி சிரிய ரசாயன ஆயுதங்கள் சேமித்து வைக்கப்படுவதாக மற்றும் தயாரிக்கப்படுவதாக கருதப்படும் இடங்கள்மீது தாக்குதல் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers