பிரான்சில் அகதிகளுக்கான சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்: ஆதரவும் எதிர்ப்பும்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் சர்ச்சைக்குரிய புகலிட மற்றும் புலம் பெயர்தல் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

புகலிட நடைமுறைகளை வேகப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, புகலிட நடைமுறைகளை செயல்படுத்தும் கால கட்டம், 120 நாட்களிலிருந்து 90 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

100 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க, 25 பேர் எதிர்த்து வாக்களித்தனர், 11 பேர் அவைக்கு வரவில்லை.

செவ்வாய்க்கிழமை செனட் இந்த மசோதாவை நிராகரித்த நிலையிலும் நாடாளுமன்றத்தின் கீழவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முக்கியக் காரணம் பிரான்ஸ் ஜனாதிபதியின் La Republique En Marche கட்சி, அறுதிப் பெரும்பான்மை வகிக்கும் கட்சியாக திகழ்வதேயாகும். மேலும் இம்மசோதாவின்படி புகலிடம் கோருவதற்கான கால அவகாசமும் 11 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக குறைக்கப்படுகிறது.

இந்நிலையில் இம்மசோதாவுக்கு மேக்ரானின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான Jean-Michel Clement, மசோதாவை எதிர்த்து வாக்களித்ததோடு கட்சியை விட்டும் வெளியேறியுள்ளார்.

அதேபோல இடது சாரியினர் சிலரும் புகலிட பிரச்சினைகள் தொடர்பாக கைது செய்து காவலில் வைக்கப்படும் நாட்கள் 45இலிருந்து 90ஆக அதிகரிக்கப்பட்டதால் குழந்தைகள் மூன்று மாதங்கள் வரை சிறையில் இருக்க நேரிடும் என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு நேர்மாறாக வலது சாரியினர் சிலர் இந்த மசோதாவால் அதிக புலம்பெயர்வோர் சட்டப்பூர்வ குடியுரிமை பெறும் சூழல் ஏற்படும் என்று குரல் எழுப்பியுள்ளனர்.

மொத்தத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள புகலிட மற்றும் புலம் பெயர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers