பாரீஸில் குண்டு வைக்க ஈரான் திட்டம்: பிரான்ஸ் அதிரடி குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் நடைபெற்ற ஈரான் எதிர்ப்பு குழுக்கள் நடத்திய பேரணி ஒன்றில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதின் பின்னணியில் ஈரான் உளவுத்துறை இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இரண்டு மூத்த ஈரான் அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குண்டு வைக்க திட்டமிடப்பட்டதாக பிரான்ஸ் கூறுவது ஒரு கட்டுக்கதை என்று தெரிவித்துள்ள ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் பிரான்சின் Dunkirk நகரில் அமைந்துள்ள, ஈரானுடன் நெருங்கிய தொடர்புடைய இஸ்லாமிய அமைப்பு ஒன்றில் பொலிசார் ரெய்டு ஒன்றை மேற்கொண்டனர்.

பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்த அமைப்பின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணி என்னவென்றால், ஜூம் மாதம் 30ஆம் திகதி பாரீஸில் ஈரான் எதிர்ப்பு ஆதரவாளர்கள் ஒரு சந்திப்பிற்காக கூடினர்.

இதற்கிடையில் ஈரானில் பிறந்த பெல்ஜிய குடியுரிமை பெற்ற Amir மற்றும் Nasimeh என்னும் ஒரு கணவனும் மனைவியும் வெடிப்பொருட்களுடன் பெல்ஜியம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ரெய்டுகளில் பாரீஸில் Merhad என்னும் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் Amir மற்றும் Nasimehஇன் கூட்டாளி என பொலிசார் குற்றம் சாட்டினர். பின்னர் ஆஸ்திரியாவை மையமாகக் கொண்ட Assadollah Assadi என்னும் நபர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டார்.

இந்த நபர்தான் Amir மற்றும் Nasimehவை சந்தித்து ஈரான் எதிர்ப்பு பேரணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வெடிபொருட்களையும் கொடுத்ததாக ஜேர்மன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்றையதினம் பிரான்ஸ் அரசும் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரான் உளவுத்துறை இருப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளது. எனவே அது ஈரான் உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் Mr Assadi மற்றும் Saeid Hashemi Moghadam என்னும் இருவரின் சொத்துக்களையும் முடக்குவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவர், இவர்கள் இருவரும் ஈரான் உளவுத்துறையின் செயலாக்கத் தலைவர்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஈரான் உடனடியாக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவுடனான நீண்ட கால உறவில் பாதிப்பை ஏற்படுத்த விரும்புபவர்களால் திட்டமிடப்பட்ட சதித்திட்டம் இது என்றும் கூறியுள்ளது.

அத்துடன் பிரச்சினைகளை உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers