ஹெலிகொப்டரில் தப்பி தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது: பரபரப்பு தகவல்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஜூலை மாதம் 1ஆம் திகதி பிரபல கொள்ளை கும்பல் தலைவன் Rédoine Faïd (46) சிறையை உடைத்து ஹெலிகொப்டரில் தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று அவனை மீண்டும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டு அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த பொலிசாரின் விசாரணையில் அவன் இதுவரை பர்தா அணிந்து பொலிசார் கண்களிலிருந்து தப்பியது தெரியவந்துள்ளது.

அவன் தான் வளர்ந்த Creil நகரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவனுடன் மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதம் 1ஆம் திகதி அவன் சிறையை உடைத்து ஒரு ஹெலிகொப்டரில் தப்பியதோடு, அந்த ஹெலிகொப்டரை இயக்கியவரையும் பிணைக்கைதியாக பிடித்துச் சென்றான். மூன்று மாதங்களுக்குப் பிறகு பொலிசார் அவனை சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.

பொலிசார் ஒருவரை பலி வாங்கிய கொள்ளை முயற்சி சம்பவம் ஒன்றின் மூளையாக செயல்பட்டதற்காக 25 ஆண்டுகள் அவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அப்போது அவனது கூட்டாளிகளான மூன்று ஆயுதம் ஏந்திய நபர்கள் அவனை விடுவித்தனர்.

மீண்டும் அவன் நேற்று 4 மணியளவில் Creil நகரில் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் தப்பியதிலிருந்தே சிறை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களின் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்துவந்த பொலிசாரின் கண்களில், Rédoine Faïd வளர்ந்த நகராகிய Creil நகரில் ஒரு இளம்பெண் சிக்கினாள்.

கடந்த வார இறுதியில் அவள் தனது காரில் பர்தா அணிந்த ஒரு நபரை ஏற்றினாள். அந்த நபரின் உருவமோ ஆணைப் போல் இருந்தது.

செவ்வாய் இரவு பர்தா அணிந்த அந்த நபர் காரிலிருந்து இறங்கி அந்த இளம்பெண்ணின் ஃப்ளாட்டுக்குள் நுழைய, அவரை பின் தொடர்ந்து பர்தா அணிந்த இன்னொரு நபரும் அதே ஃப்ளாட்டுக்குள் நுழைய, அது Rédoine Faïd மற்றும் அவனது சகோதரனான Rachidஆகத்தான் இருக்கும் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

புதன் காலை 4.20க்கு பிரான்ஸ் பொலிசார் ஏராளமானோர் அந்த ஃப்ளாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து Rédoine Faïd மற்றும் Rachid உட்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.

இதே சம்பவம் தொடர்பாக இன்னொரு இடத்தில் இன்னும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Rédoine Faïd சிறையிலிருந்து தப்பிய மூன்றே மாதங்களின் பொலிசார் அவனைக் கைது செய்துள்ள சம்பவம் ஒருபுறம் பாராட்டப்பட்டாலும் அவன் தொடர்ந்து சிறையிலிருந்து தப்பிய சம்பவங்கள் பொலிஸ் துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers