அம்பானி குடும்பம் மரியாதையானது என்பதால் தான் இந்த ஒப்பந்தத்தை செய்தோம்: பிரான்சின் டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி

Report Print Kabilan in பிரான்ஸ்

அம்பானி மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு அவர்களை தெரிவு செய்ததாக பிரான்சின் டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தெரிவு செய்ததற்கான காரணம் குறித்து டசால்ட் நிறுவன தலைமை அதிகாரியான எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘2011-12ஆம் ஆண்டுகளில் நாங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை கண்டறிந்தோம்.

அதனால், ஹலண்டே ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இது முடிவானது அல்ல. மேலும், தற்போதைய இந்திய பிரதமர் மோடி காலத்தில் கூட முடிவானது அல்ல.

நீண்ட காலமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஆலோசனை செய்து வந்தோம். அம்பானிகள் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது என்பது தவறானதாகும். இந்த விவகாரத்தில் டசால்ட் ஏற்கனவே 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

இந்த விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை. டசால்ட் விசாரணைக்கு தயாராகவே உள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் சட்டதிட்டங்கள், வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை நாங்கள் முறையாக பின்பற்றுகிறோம். நாங்கள் முற்றிலும் ஊழலுக்கு எதிரானவர்கள்.

இந்தியாவிலோ, பிரான்ஸ் நாட்டிலோ எந்த விசாரணை நடைபெற்றாலும் அதற்கு தயாராகவே இருக்கிறோம். பதிலளிப்பது எங்களது பொறுப்பு. ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பதை நிரூபிப்போம். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் 30,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது தவறான தகவலாகும்.

850 கோடிக்கு தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் வாங்கப்பட்ட விலையை விட குறைவான விலைக்கே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்