பிரான்ஸ்தான் ஐரோப்பாவின் அடுத்த தலைவர்: ஏஞ்சலாவின் இடத்தை நிரப்புவாரா மேக்ரான்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஜேர்மன் சேன்ஸலர் பதவிக்கு இனி போட்டியிடப்போவதில்லை என ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ள நிலையில் இதுவரை ஐரோப்பாவின் தலைவராக கருதப்பட்ட ஜேர்மனியின் இடத்தை பிடிக்க பிரான்ஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பவேரியாவைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை Hesseஇல் நடந்த தேர்தலிலும் தனது கூட்டணிக் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்ததையடுத்து, ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் (64) 2021இல் ஓய்வு பெறுவதாகவும் CDU கட்சியின் தலைமையிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளதோடு, இனி சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

2005 முதல் ஐரோப்பிய அரசியலில் கோலோச்சி வந்த மெர்க்கல், சிக்கலான காலகட்டத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்தை வழிநடத்த உதவி வந்தார்.

ஆனால் 2015ஆம் ஆண்டு ஜேர்மனியை திறந்து, போருக்கு தப்பி வந்த ஒரு மில்லியன் அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்தது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியதோடு, அவருக்கு இருந்த ஆதரவு குறைவதற்கும் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் ஜேர்மனி விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப பிரான்ஸ் தயாராகி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் கன்சர்வேட்டிவ் செனேட்டரான Jean Bizet, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தலைமைப் பொறுப்புக்காக தயாராக வேண்டும் என்று கூறியுள்ளதோடு, அவரது அதிகாரப்பூர்வமற்ற புதிய பொறுப்பு அவருக்கு மிகவும் கடினமானது என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்.

ஜேர்மனி ஐரோப்பாவின் வலிமை மிக்க நாடாக விளங்கியது, இப்போது அது வலிமையற்றதாக ஆகி விட்டது என்று கூறியுள்ள Jean, இனி எல்லாமே மேக்ரானின் தோளில் வந்து அமரப்போகின்றன, அது அவருக்கு மிகவும் கடினமான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஏஞ்சலா மெர்க்கலின் பதவி விலகும் முடிவை இமானுவல் மேக்ரான் ஆஹா ஓஹோவென புகழ்ந்ததற்கு நேர் மாறாக, இனி சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என ஏஞ்சலா அறிவித்துள்ளது பெரிதும் ஏமாற்றத்தை அளிப்பதாக Jean தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers