பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோ, டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டதால், அவற்றின் விலை கணிசாமாக உயர்ந்தது. அத்துடன் சர்வதேச கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பதால், வருகிற ஜனவரி 1ஆம் திகதி முதல் மீண்டும் பெட்ரோ, டீசல் விலை உயரும் என்று ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் அறிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்ததுடன், கோபத்தையும் தூண்டியது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சின் 2034 இடங்களில் விடிய விடிய நடந்த போராட்டத்தில், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் முக்கிய சாலைகளை மறித்து கற்கள், மரங்கள் போன்றவற்றை போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.

ஆங்காங்கே டயர்களும் கொளுத்தப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து ஏராளமான பொலிசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். அப்போது பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 409 பேர் காயமடைந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் தாக்குதலுக்கு ஒருவர் பலியானார். அத்துடன் காயமடைந்தவர்களில் 14 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட 157 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்துள்ளார்.

