உங்களுக்கு துணையாக நாங்களும் நிற்கிறோம்: இந்தியாவுக்கு பிரான்சின் ஆறுதல் செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதில் உங்களுக்கு துணையாக நாங்களும் நிற்கிறோம் என்று மும்பை குண்டு வெடிப்பின் பத்தாவது ஆண்டின் நினைவு நாளின்போது பிரான்ஸ் இந்தியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் நினவுகூரப்படும் நாளில், இந்தியாவுக்கு பிரான்சும் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

தீவிரவாதம் எந்த உருவில் இருந்தாலும் அதைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ், அத்தகைய குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான பிரான்ஸ் அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பத்து ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் உட்பட அனைத்து வகை தீவிரவாத வன்முறைகளுக்கும் பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள இந்தியாவின் வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் Raveesh Kumar, பிரான்சின் ஆதரவை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்குமுன் இதே நாளில் (நவம்பர் மாதம் 26ஆம் திகதி) 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடுகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் மும்பையே ஸ்தம்பித்தது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ், லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 166பேர் உயிரிழந்ததும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers