வரலாறு காணாத வன்முறையால் ஸ்தம்பித்த பிரான்ஸ்: அவசர நிலை அறிவிப்பு?

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது வாரமாக வரலாறு காணாத அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இளைஞர்கள் சிலர், வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு போராட்டத்தினை துவக்கினார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர் மாக்ரோங் தெரிவித்திருந்தார்.

டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோவாக அதிகரித்திருக்கும் நிலையில், இந்த வரி அடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து டீசல் விலை உயர்வுக்காக போராடிய மக்களுடன் சேர்ந்து மக்ரோங்கின் பிற கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

சனிக்கிழமையன்று பிரான்ஸ் நாட்டில் 1600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில் பாரிஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் மட்டும் 8000 பேர் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

இதன் வீரியமாக நேற்று இளைஞர்கள் சிலர், பொலிஸார் மீது மஞ்சள் நிறத்திலான பெயிண்டுகளை தூக்கி வீசினர். உடனே பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கார்கள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் ஈடுபட்டதாக நேற்று மட்டும் 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 பொலிஸார் உட்பட 133 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிபர் மாக்ரோங், ஆர்க் டி டிரியோமிக் பகுதிக்கு விஜயம் செய்து வன்முறை நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதற்காக உள்துறை அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers