நாளை சுற்றுலாத்தலங்கள் எதுவும் இயங்காது: பாரீஸ் வன்முறையையொட்டி அறிவிப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கடந்த சனிக்கிழமை மிக மோசமான வன்முறை வெடித்தத்தையொட்டி நாளை சுற்றுலாத்தலங்கள் எதுவும் இயங்காது என பிரான்ஸ் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக மக்கள் மஞ்சள் மேலாடை அணிந்து நடத்தும் போராட்டங்கள் முதல் மாணவர்கள் போராட்டங்கள் உட்பட பாரீஸே குழப்பத்தில் தவிப்பதால், சென்ற சனிக்கிழமையைப் போலவே இந்த சனிக்கிழமையும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலாத்தலங்கள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வார இறுதி நாட்களில் மக்கள் அதிகம் கூடும் ஈபிள் கோபுரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதிலும் 89,000 பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுவார்கள் என்று பிரான்ஸ் பிரதமர் Edouard Philippe தெரிவித்துள்ளார்.

பாரீஸில் மட்டும் 8000 பொலிசார் நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸிலுள்ள கடைகளையும் ஹோட்டல்களையும் திறக்க வேண்டாம் என்று பொலிசார் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், சில மியூஸியங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் தொடங்குவதற்கு காரணமாக அமைந்த எரிவாயு வரி உயர்வை திரும்பப் பெறுவதாக அறிவித்த பின்னரும், வேறு காரணங்களைக் காட்டி போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், வலது சாரியினர் மற்றும் இடது சாரியினர் ஆகிய இரு கூட்டத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்களும் நாளை பாரீஸில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதையடுத்து, ஈபிள் கோபுரம் உட்பட அனைத்து சுற்றுலாத்தலங்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய வன்முறையில் புராதன நினைவுச் சின்னமான Arc de Triomphe சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைகள் மற்றும் ஹோட்டல்களையும் மூடும்படி கேட்டுக் கொண்டுள்ள பொலிசார், மேசைகள், நாற்காலிகளையும் வெளியே போட்டு வைக்க வேண்டாம் என்றும் கடை உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை நடப்பதாக இருந்த பல கால்பந்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்