பிரான்சில் வெடித்தது கலவரம்.. ஒரே நாளில் 1700 பேர் கைது! அதிரடி காட்டும் பொலிஸார்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் அரசை எதிர்த்து நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியதால், ஒரே நாளில் 1700 பேரை கைது செய்து பொலிஸார் அதிரடி நடவடிக்கைக்கு மேற்கொண்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக இளைஞர்கள் சிலர், வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் மஞ்சள் நிற ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு போராட்டத்தினை துவக்கினார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர் மாக்ரோங் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த வரி அடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என அரசு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், டீசல் விலை உயர்வுக்காக போராடிய மக்களுடன் சேர்ந்து மக்ரோங்கின் பிற கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதனால் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதை உணர்ந்த அதிபர், போராட்டக்காரர்களை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். மேலும் எரிபொருள் மீதான வரியை குறைப்பதாகவும் உறுதி அளித்தார்.

ஆனால், அரசின் மீதான அதிருப்தியால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். அதில் ஒரு சிலர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கார்கள் மற்றும் கடைகளுக்கு தீவைத்து போராட்டத்தை கலவரமாக மாற்றினார். இதனால் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இது ஒருபுறமிருக்க 1ம் தேதி போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை விட நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்துள்ளனர். இதில் பலரும் அதிபர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூச்சலிட்டவாறு சென்றனர்.

பிரான்ஸ் தலைநகர், மர்சேய், போர்டோக்ஸ், லியோன் மற்றும் துலூஸ் உட்பட பிற பல நகரங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறியது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸார் ஏராளமானோரை கைது செய்ய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட 1700 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில், 1,36,000 மக்கள் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்