ஜனாதிபதிக்கு எதிராக திரும்பிய கலவரம்... போராட்டக்காரர்களுக்கு ரஷ்யா ஆதரவு? வெளியான பரபரப்பு தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

எரிபொருளுக்கான வரி உயர்வை கண்டித்து பிரான்சில் தொடங்கப்பட்ட போராட்டம், தற்போது அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக திரும்பி மிகத் தீவிரமடைந்து வருகிறது.

காற்றுமாசைக் குறைப்பதற்காக, பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்தது.

இது தொழிலதிபர்களுக்கு சாதகமான முடிவு என பிரான்ஸ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மட்டுமின்றி எரிபொருள் வரி உயர்வை கண்டித்து, சமூக வலைதளங்கள் மூலமாக பரவிய தகவலின்படி மாபெரும் மக்கள் இயக்கம் உருவானது.

‘மஞ்சள் ஆடை’ என்ற பெயரில் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து போராட்டக்காரர்கள் வீதியில் போராட்டம் நடத்தினர்.

வார இறுதியில் சனி, ஞாயிறுகிழமைகளில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.

கடந்த 2 ஆம் திகதி பெரும் கலவரம் ஏற்பட்டு, சாலையில் நின்ற வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரி உயர்வை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் அறிவித்தும் போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.

தற்போது ஜனாதிபதி பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வேறு விதமாக மாறிவிட்டது.

இந்நிலையில், 4வது வாரமாக பாரீஸ் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கின. 8 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தாலும், பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. 4வது வாரத்தில் நேற்று முன்தினம் தான் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை பொலிசார் 1,700 பேரை கைது செய்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் பாரிஸ் நகரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைதாகியுள்ளனர். பிரான்ஸ் முழுவதும் சுமார் 125,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே அண்டை நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலும் இந்த போராட்டம் பரவியுள்ளது.

மேலும் சமூக வலைதளத்தில் போராட்ட தகவல் பரப்பும் பல கணக்குகள் ரஷ்யாவுடன் தொடர்புடையதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், எந்த தலைமையும் இல்லாமல் நடக்கும் பிரான்ஸ் போராட்டம் அந்நாட்டு அரசுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்