இன்னும் சூடு தணியாத பிரான்ஸ் போராட்டங்கள்: களத்தில் வித்தியாசமான கோலத்தில் இறங்கிய பெண்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரசும் ஜனாதிபதியும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் போராட்டக்காரர்கள் எந்த முடிவுக்கும் ஒத்து வரமாட்டேன்கிறார்கள்.

போராட்டங்கள் தொடங்கி ஐந்து வாரங்கள் ஆன நிலையிலும், இந்த சனிக்கிழமையும் பாரீஸ் தெருக்களில் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களைக் காண முடிந்தது. Champs Elysees பகுதியில் பொலிசாரோடு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டாலும், பொதுவாக பேரணி நடத்தியவர்கள் அமைதியாகவே போராடினார்கள்.

எங்களுக்கு, பாவம் பார்த்து வழங்கப்படும் சிறு உதவிகள் தேவையில்லை, நாங்கள் சுதந்திரமாக வாழவே விரும்புகிறோம், எங்கள் வேலைக்கான கூலியை எதிர்பார்க்கிறோமேயொழிய இலவசங்களை அல்ல என்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்த முறை அவர்களது போராட்டத்தின் நோக்கம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது அல்ல, தங்கள் செய்தியை தெரியப்படுத்துவது.

மக்களும் சத்தமாகவும் தெளிவாகவும் அந்த செய்தியைக் கேட்டார்கள். ஒரு கட்டத்தில் பெண்கள் தங்கள் பங்குக்கு வித்தியாசமான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Liberty Leading the People என்னும் புகழ்பெற்ற ஓவியத்தில் வருவது போலவே அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த பெண்கள்.

அந்த படத்தில் தொப்பி அணிந்த ஒரு பெண் மேலாடையின்றி, கையில் பிரெஞ்சுப் புரட்சியின் மூவர்ணக் கொடியை ஒரு கையிலும் துப்பாக்கி ஒன்றை இன்னொரு கையிலும் பிடித்துக் கொண்டு பிணக்குவியலுக்கு நடுவில் நிற்பது போல் அந்த படம் வரையப்பட்டிருக்கும்.

பின்னர் அந்தக் கொடிதான் பிரான்சின் தேசியக் கொடியானது. அந்த ஓவியத்தை நினைவு படுத்தும் வகையிலேயே, தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக, அந்த பெண்கள் பொலிசார் முன்பு அரை நிர்வாணமாகவும், துப்பாக்கிக் குண்டுகள் செய்யப் பயன்படுத்தப்படும் வெடி மருந்து பவுடரை தங்கள் முகம் மற்றும் உடலில் பூசிக்கொண்டும் நின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்