கணவருடன் விடுமுறைக்கு வந்த பெண்.. பாரிஸ் வெடி விபத்தில் பலியான பரிதாபம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஸ்பெயின் நாட்டு பெண் உட்பட மூன்று பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

பாரிஸ் வீதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து காரணமாக 37 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 10 பேர் உயிருக்கு போராடும் நிலையில் இருந்தனர்.

சுமார் 200க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் என 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை பிரான்சின் உள்துறை அமைச்சர் Christophe Castaner உறுதிபடுத்தியுள்ளார். குறித்த ஸ்பெயின் நாட்டு பெண், தனது கணவருடன் பாரிசுக்கு விடுமுறையைக் கொண்டாட வந்துள்ளார். அவர் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். குறித்த வெளிநாட்டு பெண் தொடர்பான விபரம் எதுவும் வெளியாகவில்லை. ஸ்பெயின் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Josep Borrell இச்சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘மத்திய பாரிசில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஸ்பானிஷ் பெண் உட்பட மூன்று பேர் பலியானதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்