போலிச் செய்திகளை பரப்பாதீர்கள்: பத்திரிகையாளர்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

போலிச் செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களை மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் அடித்து உதைத்த சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்சின் Rouen நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தங்கள் கோபத்தை பிரான்ஸ் தொலைக்காட்சி குழு ஒன்றின் மீது காட்டினர்.

தொலைக்காட்சி குழுவினருக்கும் அவர்களது பாதுகாவலர்களுக்கும் சரியான உதையும் மிதியும் விழுந்தன.

உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பிரான்சின் பிரபல தொலைக்காட்சி குழுவினரும் அவர்களது பாதுகாவலர்களும் ஒரு கூட்டத்தால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

தாக்குபவர்களில் சிலர் போராட்டக்காரர்கள் அணியும் மஞ்சள் மேலாடையை அணிந்துளனர். தொலைக்காட்சி குழுவினரை சூழ்ந்து கொண்டு தாக்கும் அந்தக் கூட்டம், பின்னர் அவர்களை ஓட ஓட துரத்துகிறதை அந்த வீடியோவில் காணலாம்.

பாதுகாவலர்களில் ஒருவருக்கு மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதே நேரத்தில், பாரீஸிலும் இன்னொரு தொலைக்காட்சி குழு தாக்கப்பட்டதோடு, ஒரு கும்பல் அவர்களது கெமராக்களையும் திருட முற்பட்டது.

ஒன்பது வாரங்களாக தொடர்ந்து மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சனியன்று பாரீஸ், Marseille, Bordeaux, Lyon, Strasbourg உட்பட பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் 84,000 பேர் கலந்து கொண்டதாக உள்துறை அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்கள் பேரணிகள் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தவறான செய்திகள் பரப்பி வருவதாக போராட்டக்காரர்கள் கருதுவதையடுத்து, ஊடகங்கள் மீது போராட்டக்காரர்கள் கடும் கோபத்தில் உள்ளதால், அடி வாங்கும் பத்திரிகையாளர்கள் மீது மற்ற போராட்டக்காரர்கள் இரக்கம் காட்டுவதில்லை.

சமீபத்தில் நடந்த சம்பவத்தில் பிரான்ஸ் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின்முன் திரண்ட போராட்டக்காரர்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக முழக்கங்கள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்