பிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள், இரண்டு பிரிவாகப் பிரிந்து, தங்களுக்குள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒற்றுமையாக கூடி அரசின் எரிபொருள் வரி உயர்வுகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை Lyonஇல் மோதலில் நடைபெறும் காட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களுக்குள்ளேயே வலது சாரியினர் ஒரு குழுவாகவும் இடது சாரியினர் ஒரு குழுவாகவும் மோதிக் கொண்டனர்.
கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து அவர்கள் மோதிக் கொண்டதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பொலிசார் வந்து இரண்டு குழுவினரையும் பிரித்து விட வேண்டியதாயிற்று. மோதலை தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்தவர்கள் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதுவரை ஒற்றுமையாக உலகமே வியந்து நோக்கும் வகையில் போராடி வந்த மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், உலகின் பல பகுதிகளில் அவர்களைப் பின்பற்றி போராட்டங்களை முன் வைத்த பலருக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.