மஞ்சள் மேலாடை போராட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்! மக்கள் விருப்பம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் மக்களில் பாதிக்கும் மேலானோர் மஞ்சள் மேலாடை போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் மக்களில் மூன்றில் இரண்டு பேர், மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் ஆரம்பத்தில் தாங்கள் எதற்காக போராட்டங்களை நடத்தினார்களோ அந்த நோக்கங்களுக்காக தற்போது போராடவில்லை என்று நம்புவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு எதிராக திரும்பிவிட்டார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்த முதல் ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதத்தின் மத்தியப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராடுவதும், பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடக்கும் போராட்டங்களில் பலர் காயமடைவதும் தொடர்கிறது.

தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த ஆய்வில் பங்கேற்றோரில் 56 சதவிகிதத்தினர் போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என எண்ணுவதாக தெரிவித்துள்ளது. டிசம்பரை ஒப்பிடும்போது இவ்வாறு கருதுபவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 58 சதவிகிதம் பேர் இன்னும் மஞ்சள் மேலாடைக்காரர்கள் மீது பரிதாபப்படுவதாகவும் ஏன், இன்னும் ஆதரவளிப்பதாகவும் கூட தெரிவித்துள்ளனர் என்றாலும் அந்த எண்ணிக்கை கடந்த மாதத்தைவிட 5 சதவிகிதம் குறைந்துள்ளது.

இது ஒரு பெரிய மாற்றம் என்று கூறியுள்ள ஆய்வமைப்பின் தலைவரான Bernard Sananès, ஒரு கட்டத்தில் இந்த போராட்டங்களுக்கு ஆதரவளித்தவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதமாக இருந்தது, டிசம்பருக்கும் ஜனவரிக்கும் இடையில் அது 55 சதவிகிதமாகியுள்ளது என்கிறார்.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, 64 சதவிகிதம்பேர், போராட்டங்கள் ஆரம்பத்தில் இருந்த நோக்கங்களை பிரதிபலிக்கவில்லை என்று கருதுவதனால் இருக்கலாம்.

இன்னும் ஒவ்வொரு வார இறுதியிலும் போராட்டங்கள் தொடர்கிறது என்றாலும், போராட்டங்களில் பங்கேற்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்