இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள பிரான்ஸ்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குள், தங்கள் மீதான தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காகவும், அந்த தீவிரவாத அமைப்பு மீது நடத்திய தாக்குதலுக்கு ஆதரவை பெறும் நோக்கிலும், பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்காமல் தடுப்பதற்காகவும் இந்தியா தனது சர்வதேச கூட்டாளிகளை தொடர்பு கொண்டது.

வெளியுறவுச் செயலரான விஜய் கோகலேயும் வெளி விவகார அமைச்சகத்தில் உள்ள பிற செயலர்களும் டெல்லியில் இருக்கும் அமெரிக்க, ரஷ்ய, சீன, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய தூதர்களிடம் இந்தியா தற்காப்புக்காக நடத்திய வான் வழித் தாக்குதல் குறித்து விளக்கினர்.

இவ்வாறு பிற நாட்டு தூதர்களுக்கு, தாக்குதல் குறித்து இந்திய செயலர்கள் விளக்குவது 15 நாட்களுக்குள் இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படைமீது புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், இந்தியா தனது சர்வதேச கூட்டாளி நாடுகளின் தூதர்களுக்கு தாக்குதல் குறித்து விளக்கியது.

70க்கும் மேற்பட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.

நேற்று வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவரித்தார்.

இந்தியாவுக்கு பல நாடுகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பின் தலைவரான மசூத் அஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவுடன் இணைந்து மும்முரம் காட்டி வரும் பிரான்ஸ், எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கெதிரான பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவின் உண்மைத் தன்மையை அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, தனது நாட்டுக்குள் அமைந்திருக்கும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி புல்வாமாவில் நடத்திய தாக்குதலுக்கு பிரான்ஸ் தனது கண்டனங்களை உறுதியாக தெரிவித்துக் கொண்டது.

எல்லா விதத்திலும் தீவிரவாதத்திற்கெதிரான போரில் இந்தியாவுக்கு துணை நிற்கும் பிரான்ஸ், இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்பு மீது சர்வதேச சமுதாயம் தடைகளை விதிப்பதற்கு முழு மூச்சாக முயற்சி எடுத்து வருவதோடு, அந்த அமைப்பின் நிதி அமைப்பையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, பிரான்ஸ் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய பாகிஸ்தான் பகுதியில் அமைதி நிலவுவதற்காகவும் போரைத் தவிர்க்கும் வகையிலும், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும் என மனமார கேட்டுக் கொள்வதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

வேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும் பிரான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்