தீவிரவாதி மசூத் அசார் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகள் எடுத்த முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா மன்றம் ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் (50), புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல நாச வேலைகளுக்கு மூளையாக செயல்பட்டவர்.

இவரையும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன.

ஆனால் கடைசி நேரத்தில் சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இந்த தீர்மானம் பற்றி ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என சீனா கேட்டதால் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. அவரது பெயரை ஐரோப்பிய யூனியனின் தீவிரவாதிகள் சந்தேக பட்டியலில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரான்ஸ் பொருளாதாரத்துறை, நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் திகதி நடந்த தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் பலியாயினர். இதற்கு ஐ.நா வால் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸ் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்