பாரீஸில் திருநங்கைக்கு நேர்ந்த அவமானம்: வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மத்திய பாரீஸில் அல்ஜீரிய அதிபருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி ஒன்றின்போது, திருநங்கை ஒருவர் அவமதிக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானதையடுத்து பிரச்சினை பெரிதாகியுள்ளது.

ஜூலியா (31) என்ற அந்த திருநங்கையைக் குறிவைத்து மூன்று ஆண்கள் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரை சுற்றி வளைத்து, நீ ஒரு ஆண், உன்னை எங்கும் போக விடமாட்டோம் என்று கூறியதோடு அவர் அங்கிருந்து தப்ப முயன்றபோது அவரைப் பிடித்துத் தள்ளி அவர் மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறார்கள்.

தொலைக்காட்சி மற்றும் ரேடியோவுக்கு பேட்டியளித்த ஜூலியா, இப்படிப்பட்ட ஒரு மோசமான அனுபவம் தனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை என்கிறார்.

மூன்றாம் பாலினத்தவர் மீதான தாக்குதல் தினமும் நடக்கிறது என்று கூறிய ஜூலியா, எனக்கு ஓரளவு பலம் இருந்ததால் தாக்குதலை சமாளித்துக் கொண்டேன், மற்ற திருநங்கைகளுக்கு இதே பலம் இருக்கும் என்று சொல்ல முடியாது, இப்படிப்பட்ட தாக்குதலால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

வெளியான அந்த வீடியோவில், Place de la République என்ற இடத்தில் மெட்ரோ ஸ்டேஷனுக்கு செல்லும் படிக்கட்டுகளில் ஜூலியா ஏறுகிறார்.

அங்கு அல்ஜீரிய அதிபருக்கு எதிராக பேரணி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அங்கு செல்லும் ஜூலியாவை அரபி மொழியில் நையாண்டி செய்தவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் தடுக்கிறார்கள்.

ஒருவர் அவரது முடியைப் பிடித்து இழுக்க, அல்ஜீரிய கொடியை உடலில் போர்த்தியிருந்த ஒரு பெண் ஜூலியாவைக் காப்பாற்ற முயல்கிறார்.

தொடர்ந்து ஜூலியா முன்னேற, ஒரு ஆண் அவரைக் குத்த, இன்னொருவர் அவரை மிதிப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

பின்னர் போக்குவரத்து பொலிசார் தலையிட்டு ஜூலியாவை மீட்டு பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள்.

ஆனாலும், பொலிசாரும் ஜூலியாவை ஆண் என்று அழைத்து, இனிமேல் இப்படி உடையணியாதீர்கள் என்று கூறியதாக சமூக நல அமைப்பு என்று தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ பிரான்சில் வைரலான நிலையில், தனக்கு என்ன நடந்தது என்பதை விளக்க ஜூலியா முடிவு செய்தார்.

தனக்கு தொல்லை கொடுத்த அந்த நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தான் விரும்பவில்லை என்றும், மக்களின் எண்ணம் மாற வேண்டும் என்றே தான் விரும்புவதாகவும் ஜூலியா தெரிவிக்கிறார்.

பாலின அடிப்படையில் தாக்குதல் என்ற பிரிவில், பாரீஸ் பொலிசார் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்கள்.

ஜூலியா மீதான தாக்குதலுக்கு பாலின சமத்துவ அமைச்சர் Marlène Schiappa மற்றும் பாரீஸ் நகர மேயர் Anne Hidalgo உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers