பணிந்தார் மேக்ரான்? அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் அமைதியை குலைத்துப்போட்ட மஞ்சள் மேலாடை போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மேக்ரான் திட்டமிட்டிருந்த நிலையில், நாட்ரி டாம் தேவாலயம் தீப்பற்றியதையடுத்து அது ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ள மேக்ரான் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து தொடங்கிய மஞ்சள் மேலாடை போராட்டங்கள், பின்னர் பொருளாதார சமத்துவமின்மை குறித்த பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு சில நேரங்களில் வன்முறையில் முடிந்தன.

போராட்டங்களின் மையக்கருத்து நியாயமான கோரிக்கைகளைக் கொண்டதுதான் என இமானுவல் மேக்ரான் ஒப்புக்கொண்டார்.

தான் தவறான பாதையில் செல்லத்தொடங்கி விட்டேனா என தனது உரையின்போது கேட்ட மேக்ரான், அரசின் சீர்திருத்தங்கள் இதுவரை சரியாகவே இருந்துள்ளதாகவும், ஆனால் போதுமான வேகத்தில் இல்லை என்றும் தெரிவித்தார்.

மக்களிடம் நடத்திய தேசிய விவாதங்களிலிருந்து தான் பல விடயங்களைக் கற்றுக் கொண்டதாகவும் மேக்ரான் தெரிவித்தார்.

தற்போது அவர் ஆற்றிய உரையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். வருமான வரியில் கணிசமான வெட்டு. ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்புகள்.

தேர்தலில் பங்கேற்றல் மற்றும் வாக்கெடுப்புக்களை எளிதாக்குதல். மேக்ரான் உட்பட பல பிரபலங்கள் கல்வி பயின்ற ENA பல்கலைக்கழகம் மூடல்.

இப்படி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மேக்ரான், தான் இன்னும் அதிக மனித நேயத்துடனும், முரட்டுத்தனம் இன்றியும் நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டார்.

மேக்ரான் ஆற்றிய உரையின் சாராம்சம், தற்போது என்ன மாற வேண்டும் என்பதை குறித்து இல்லாமல், என்ன மாறாமல் இருக்க வேண்டும் என்பதைக் குறித்ததாக இருந்தது.

வரி, தொழில் மற்றும் கல்வி ஆகியவற்றில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் சரியானவை, அவை சரியாக செயல்படுகின்றன, இன்னும் பல வர இருக்கின்றன. மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் இதை விரும்ப மாட்டார்கள்.

ஆனால் மேக்ரானின் இலக்கு அவர்களல்ல, அவர் மொத்த பிரான்சுக்குமாக பேசியிருக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்