மேதின போராட்டங்களின்போது மருத்துவமனை குறிவைக்கப்பட்டது ஏன்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மே தின பேரணியின்போது வன்முறை வெடித்த நிலையில், ஏராளமான போராட்டக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்குள் நுழைந்தது ஏன் என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பாரீஸில் மேதினப் போராட்டங்களின்போது திடீரென ஒரு கும்பல் மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைந்தது.

மருத்துவமனையின் இயக்குநரான Marie-Anne Ruder மருத்துவமனைக்கு வந்தபோது, கதவுகள் திறந்து கிடப்பதையும் ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைவதையும் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பத்து நிமிடங்களுக்குள் வந்த பொலிசார் மருத்துவமனைக்குள் அத்து மீறி நுழைந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக அறுவை சிகிச்சையிலிருந்து மீள்வோர் இருக்கும் வார்டைக் குறி வைத்து போராட்டக்காரர்கள் ஓடியிருக்கின்றனர்.

அந்த வார்டுக்குள் இருந்த ஒரு மருத்துவரும் நர்ஸ்களும் அதன் கதவை திறக்க முடியாதபடி உள்ளிருந்து அதை பிடித்துக் கொண்டிருந்ததால் போராட்டக்காரர்களால் வார்டுக்குள் நுழைய முடியாமல் போயிருக்கிறது.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மருத்துவமனை குறிவைக்கப்பட்ட விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகள் பலர் நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். என்றாலும் ஏன் போராட்டக்காரர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அவர்கள் மருத்துவமனைக்குள் தாக்குதல் நடத்துவதற்காக நுழைந்தார்களா, பொலிசாரிடமிருந்து தப்புவதற்காக மருத்துவமனைக்குள் ஓடினார்களா அல்லது போராட்டங்களின்போது தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரியை குறி வைத்து வந்தார்களா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் எந்த கேள்விக்கும் இதுவரை பதிலில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்