பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அழைக்கும் தொலைபேசி கட்டணங்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மே 15 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த கட்டணங்கள் லேண்ட்லைன் மற்றும் மொபைல் இரண்டிற்கும் பொருந்தும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு செய்யப்படும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான கட்டணங்களை குறைக்கக்கோரி நவம்பரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரான்சின் நான்கு மொபைல் ஆபரேட்டர்களும் தங்கள் கட்டணங்களை குறைக்க வேண்டியதாயிற்று.

மே மாதம் 15ஆம் திகதியிலிருந்து இந்த கட்டணக்குறைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள நாடுகளுக்குள் செய்யப்படும் அனைத்து சர்வதேச அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கும் பொருந்தும்.

2017ஆம் ஆண்டு ரோமிங் கட்டணங்களை ஒழித்த பிறகு, ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாடுகளுக்கிடையிலான அதிகப்படியான கட்டணங்களுக்கெதிராக நடவடிக்கையை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான ஐரோப்பிய கமிஷனரான Mariya Gabriel தெரிவித்துள்ளார்.

மே 15 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தின்படி, பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள நாடுகளுக்குள் செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடம் ஒன்றிற்கு 22.8 செண்ட்களுக்கு மிகாமலும், குறுஞ்செய்தி ஒன்றிற்கான கட்டணம் 7.2 செண்ட்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதனால் மாதம் ஒன்றிற்கு 78 யூரோக்கள் வர மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்