நான் நிரபராதி: பிரெஞ்சு பெண் கொலை வழக்கில் சிக்கிய பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியர், தான் நிரபராதி என்று கூறியுள்ளார்.

1996ஆம் ஆண்டு அயர்லாந்தில் கொலை செய்யப்பட்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி Sophie Toscan du Plantier கொலை வழக்கில், பாரீஸில் நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியரான Ian Bailey நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

என்றாலும் அவர் இல்லாமலே, பாரீஸ் நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்துள்ளது. Sophieயை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன் நீதிபதிகள் Ian Baileyவை சிறையில் அடைக்கும் நோக்கில் அவர் மீது புதிய கைது வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

கைது வாரண்ட் குறித்து Ian Baileyயிடம் கேட்டபோது அதைக் குறித்து தனக்கு கவலையில்லை என்றார் அவர்.

நீங்கள் கைது செய்யப்படப்போகிறீர்களா என்று கேட்டதற்கு, திங்கள் அல்லது செவ்வாயன்று ஒரு வேளை தன்னை கைது செய்ய பொலிசார் வரலாம் என்று கூறினார் அவர்.

அயர்லாந்திலிருந்து யாராவது வந்து, கொலை செய்தவர் தானில்லை என்பது தங்களுக்கு தெரியும் என்று கூறவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.

உண்மை வெளிவரவேண்டும் என, தான் பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட Ian Bailey, தொடக்கத்திலிருந்தே தன்னைக் குறித்த பொய்யான விடயங்கள் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

எப்போதுமே தான் ஒரு நிரபராதி என்று கூறி வந்த Ian Bailey, நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்து வந்தார்.

அயர்லாந்து அரசும், அவர் குற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி, Ian Baileyயை விசாரணைக்காக பிரான்சுக்கு அனுப்ப மறுத்து வந்தது.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும், தான் குற்றவாளியில்லை, நிரபராதி என்று தெரிவித்துள்ளார் Ian Bailey.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்