Brexit: அக்டோபர் 31 அன்று பிரெக்சிட் நிறைவேற்றப்படும்: பிரான்ஸ் அமைச்சர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட் தொடர்பாக முன் வைக்கப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் கிளறும் திட்டமே இல்லை என்று கூறியுள்ள ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரான்சின் மாகாணச் செயலரான Amélie de Montchalin, அக்டோபர் 31 அன்று பிரித்தானியா வெளியேறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தெரஸா மேக்கு அடுத்து பிரித்தானிய பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன், பிரெக்சிட் நிறைவேறினால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய 39 பில்லியன் யூரோ தொகையை செலுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில், லண்டனுக்கு இரண்டு நாள் அலுவல் ரீதியான பயணமாக சென்றுள்ள Amélie, அது சர்வதேச சட்டங்களுக்குட்பட்ட விடயம் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்சைப் பொருத்தவரையில் 31ஆம் திகதி காலக்கெடுவை நீட்டிக்க ஒரே நிபந்தனை, பிரித்தானியாவில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல்தான், அதாவது அரசியல் சூழல் முற்றிலும் மாறும் என்றால் பிரெக்சிட் திகதியை தள்ளிவைப்பது குறித்து யோசிக்கலாம் என்றார் Amélie.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறியுள்ளபடி, பிரித்தானியாவில் முற்றிலும் ஒரு மாறுபட்ட அரசியல் சூழல் உருவானால், ஐரோப்பியர்கள் பிரெக்சிட் திகதி குறித்து யோசிக்கலாம் என்று கூறிய Amélie, இப்போதைக்கு அக்டோபர் 31தான் இறுதி நாள் என்றார்.

ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி பிரித்தானியா வெளியேறுவது பிரான்சின் விருப்பமல்ல என்று கூறிய அவர், என்றாலும் நாங்கள் அதற்கும் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

பிரச்சினை என்னவென்றால், பிரித்தானியாவில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை வகை பிரெக்சிட்டுகள் உள்ளன என்று கூறியுள்ள Amélie, எங்களுக்கு இப்போது ஒரு தெளிவு வேண்டும், எங்களுக்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்றார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers