பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெயரில் ஒரு நவீன மோசடி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி மோசடி நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், பிரான்சில் பிரபலம் ஒருவரின் தோற்றத்தை போலியாக பயன்படுத்தி மாபெரும் மோசடி ஒன்று நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும் மோசடியில் அடிபட்ட பெயருக்கு சொந்தக்காரர் சாதாரண மனிதர் அல்ல, அவர் பிரான்சின் பாதுகாப்புத்துறை அமைச்சராக 2017 வரை பணியாற்றிய Jean-Yves Le Drian!

பல பிரபல செல்வந்தர்களிடமிருந்து பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் Jean-Yves Le Drianஇன் பெயரை பயன்படுத்தி சுமார் 80 மில்லியன் யூரோக்கள் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கோடீஸ்வரர்களை ’Le Drian’ தொடர்பு கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை மீட்பதற்கு உதவுவதற்காக நிதி உதவி செய்யுமாறு கோருவார்.

பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக பிணையத்தொகை செலுத்துவதில்லை என்பதால், அவர் இந்த தொகையை சீனாவிலுள்ள ஒரு வங்கியில் செலுத்துமாறு கேட்டுக் கொள்வார். பலர் இதில் ஏதோ ஏமாற்று வேலை உள்ளது என சந்தேகம் எழுந்ததால் எச்சரிக்கையடைந்துள்ளனர். என்றாலும், சிலர் அதை நம்பியுள்ளார்கள்.

ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிணைக்கைதிகளை மீட்பதற்காக பிணையத்தொகை கேட்கலாமே என எண்ண தூண்டப்பட்டுள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்கள். முதலில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு மட்டுமே வர, பின்னர் ’Le Drian’ Skypeஇல் தோன்றி பேசுவார்.

பின்னர் அமைச்சர் போல் தோற்றமளிக்கும் அந்த நபர், அமைச்சரின் முகம் போன்ற முகமூடியை அணிந்து, அவரது அலுவலகம் போன்ற ஒரு அறையில் கொடிகள் சூழ அமர்ந்து கொண்டு பேசுவது தெரியவந்தது.

பலர் ஏமாந்த நிலையில், செனகல் நாட்டு தலைவர் Macky Sall மட்டும் இது ஒரு மோசடி என்பதை புரிந்து கொண்டார்.

காரணம் Le Drianம் Macky Sallம் ஏற்கனவே நல்ல நண்பர்கள். Le Drian, Macky Sallஇடம் பேசும்போது நீ அல்லது நீங்கள் என்று அழைப்பதுதான் வழக்கம், ஆனால் இந்த போலி Le Drian அவரை தாங்கள் என்று அழைத்து பேச, அவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் மோசடியிலிருந்து தப்பி விட்டார், கோடிக்கணக்கான பணம் மிச்சம்!

2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உக்ரைனுக்கு பயணம் செய்த போலி Le Drian, அதாவது பிரெஞ்சு இஸ்ரேலி குடிமகனான, மாறு வேடமிட்டு மக்களை ஏமாற்றும் Gilbert Chikli என்ற நபர் பொலிசில் சிக்கினார்.

அவர் ஒரு முகமூடி வாங்குவதற்காக உக்ரைனுக்கு வந்ததற்கான ஆதாரங்கள் அவரது மொபைல் போனிலிருந்தே கிடைத்தையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்ட Chikli பாரீஸில் சிறையில் இருக்கிறார்.

ஆனால் அதிர்ச்சிக்குரிய விதமாக, அவர் சிறையில் இருக்கும்போதே இன்னொரு ’Le Drian’ மீண்டும் Skypeஇல் தோன்றி பேசியுள்ளார்.

மீண்டும் அவர் பிரான்சின் நட்பு நாடுகளிடம் பணம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வரத்தொடங்க, தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் Tel Avivக்கு அருகே பிரெஞ்சு இஸ்ரேலி குடிமக்கள் மூன்று பேர் சிக்கினர்.

அதற்கு பிறகு Le Drian பெயரில் அழைப்புகள் வருவது நின்று விட்டது.

ஆனால் Le Drian பெயரில் மோசடி செய்தது ஒருவர் அல்ல, பலர் கூட இருக்கலாம், Le Drianஆக நடிக்க பயிற்சி பெற்ற பலர் இருக்கலாம் என தற்போது கருதப்படும் நிலையில், மோசடி தொடரவில்லை என்பது இப்போதைக்கு பெரிய ஆறுதல் எனலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்