உயிருள்ள பசுக்கள் வயிற்றில் ஓட்டை போட்டு ஆராய்ச்சி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் உயிருடன் இருக்கும் பசுக்கள் வயிற்றில் ஓட்டை போட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதை பிரான்ஸ் விலங்கு உரிமைகள் குழு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் எல்214 என்ற விலங்கு உரிமைகள் குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த வீடியோ பிப்ரவரி மற்றும் மே மாதத்தில் வடமேற்கு பிரான்சின் செயிண்ட்-சிம்போரியனில் உள்ள தனியார் விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்குள் எடுக்கப்பட்டதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஓட்டைகளின் மூலம் விலங்கின் வயிற்றில் நேரடியாக அணுக முடியும், இந்த செயல்முறை 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த ஐரோப்பா முழுவதும் ஆராய்ச்சி மையங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறை விலங்குகளை எளிய இயந்திரங்களாகக் கருதும் விதத்தின் அறிகுறி என குறிப்பிட்டுள்ள எல்214 குழு, இதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணையதள பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

விலங்குகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் செய்யப்படும் இதுபோன்ற சோதனைகளை உடனடியாக தடை செய்ய, ஆராய்ச்சி மற்றும் வேளாண்மை அமைச்சர்களிடம் குடிமக்கள் என்ற வகையில் கோரிக்கை விடுக்க அழைப்பு விடுப்பதாக எல்214 தெரிவித்துள்ளது.

நிலையத்தில் உள்ள ஆறு பசுக்கள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆராய்ச்சி நிலையத்தை செயல்படுத்தி வரும் அவ்ரில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறை உலகம் முழுவதும் ஆராய்ச்சிக்காக பயம்படுத்தப்பட்டு வருகிறது என எல்214 குழுக்கு பதிலளிக்கும் வகையில் அவ்ரில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், தாவர புரதங்களின் செரிமானத்தை ஆய்வு செய்வதற்கான ஒரே தீர்வு இதுதான் என தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி நிலையத்திற்குள் எல்214 குழுவின் தேவையற்ற சட்டவிரோத ஊடுருவலை விமர்சித்த அவ்ரில் நிறுவனம், எப்போதும் ஆராய்ச்சி நிலையத்தின் கதவுகள் பொதுமக்களுக்கு திறக்கிறது என கூறியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்