பிரான்ஸ் மசூதியில் துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிச்சூடு நடத்தியவன் சடலமாக கண்டெடுப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மர்ம நபர் ஒருவர் மசூதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நிலையில், சற்று தொலைவில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Brest பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் மேற்கு பிரான்சில் அமைந்துள்ள அந்த மசூதியின் இமாம் மற்றும் இன்னொருவர் காயமடைந்துள்ளனர்.

Rachid El Jay என்னும் அந்த இமாம் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன, மற்றவர் உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன.

என்றாலும் இருவரின் உயிருக்கும் ஆபத்தில்லை என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர், மசூதியிலிருந்து ஆறு மைல் தொலைவில், விமான நிலையம் அருகில் இறந்து கிடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தொழுகை நடத்தி விட்டு மசூதியிலிருந்து வெளியேறும்போது அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக Brestஇன் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி செய்யப்பட்டபின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மதப்பின்னணி கொண்டதா என்பது குறித்து இப்போதைக்கு தெரியவில்லை.

பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதோடு விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் மத தலங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்