லெவல் கிராசிங்கில் கதவு மூடப்படும் நேரத்தில் வேகமாக நுழைந்த கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலியான சம்பவம் வட கிழக்கு பிரான்சில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு பிரான்சில், Marne பகுதியில் லெவல் கிரசிங்கில் நுழைந்த ஒரு கார் மீது வேகமாக வந்த ஒரு ரயில் மோதியது.
ரயில் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்க, அதில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு பத்து வயது சிறுமியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இரு கைக்குழந்தைகளும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தகவல் அறிந்து அங்கு நான்கு தீயணைப்பு இயந்திரங்களுடன் வந்த 28 தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியில் இறங்கினர்.
இந்த சம்பவத்தில் ரயிலில் பயணித்த நான்கு பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் ரயில் ஓட்டுநருக்கு மன நல ஆலோசனை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் சுமார் 15,000 லெவல் கிராசிங்குகள் உள்ள நிலையில், அவற்றில் பல அபாயகரமானவையாக கருதப்படுகின்றன.
அவற்றில் 10,000 லெவல் கிராசிங்குகளுக்கு தானியங்கி கதவுகள் இருப்பது உண்மைதான் என்றாலும், எல்லாவற்றிற்கும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்தான்.