98 வயதிலும் அயராமல் உழைக்கும் ஒரு மருத்துவர்: பிளாட்பாரத்தில் காத்துக் கிடக்கும் நோயாளிகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் புறநகர் பகுதி ஒன்றில் அமைந்திருக்கும் அந்த கிளினிக் நிரம்பி வழிகிறது.

கட்டிடத்திற்குள் இடம் இல்லாமல், மக்கள் வெளியில் பிளாட்பாரத்திலும் வரிசையில் நிற்கிறார்கள்.

அவர்களில் சிலர் வரிசையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதிகாலை நான்கு மணிக்கே வெகு தொலைவிலிருந்து பயணம் செய்து வந்திருக்கிறார்கள்.

உள்ளே நுழையும்போதே அங்கிருக்கும் Yamina Derni (63) என்ற பெண்மணி, இந்த மருத்துவரை எல்லோருக்கும் பிடிக்கும், காரணம், அவர் நீங்கள் சொல்வதை கவனித்துக் கேட்பார், உங்களை அமைதிப்படுத்துவார் என்கிறார்.

அவர் பேசும் விதத்தில், அவரது வயதைக் கூட நீங்கள் கவனிக்க மாட்டீர்கள் என்கிறார் அவர்.

ஆம், அந்த மருத்துவமனையின் ஒரே மருத்துவரான Christian Chenay கடந்த மாதம்தான் தனது 98ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அவரைப் பார்க்கும்போது, அவரது உற்சாகத்தைப் பார்க்கும்போது நிச்சயம் அவருக்கு 98 வயது என்பதை நம்பமுடியவில்லை.

தனது கடைசி நோயாளிகளான ஒரு குழந்தையையும் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படும் ஒரு பெண்ணையும் கவனித்து முடித்தபின் பேட்டி கொடுப்பதற்காக வருகிறார் Christian.

என்னால் மருத்துவப்பணியை விட முடியவில்லை என்று கூறும் Christian, 19,000 பேர் வாழும் இந்த பகுதியில் இருக்கும் வெறும் மூன்றே மருத்துவர்களில் ஒருவராக நான் இருக்கும் நிலையில், நான் எப்படி பணி செய்வதை நிறுத்த முடியும், புறநகர் பகுதிகளில் வாழும் இந்த மறக்கப்பட்டுப்போன மக்களுக்காகத்தான் இதெல்லாம் என்கிறார்.

இன்னொரு விடயம், நான் மருத்துவத்தை நேசிக்கிறேன், அத்துடன் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறேன், இந்த வயதில் நீங்கள் TV பார்த்துக்கொண்டு, படுத்து தூங்கிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்களால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்கிறார் அவர்.

மருத்துவமனை வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதாகவும் இருந்து விடவில்லை Christianக்கு.

காரணம் பல ஆண்டுகளுக்கு முன் அவரது மருத்துவமனை வாசலிலேயே அவரது மனைவி Martheவை சிலர் மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தினார்கள்.

அதில் அவர் உயிர் பிழைத்தார் என்றாலும், அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

அதற்குப்பின் தனது 91ஆவது வயதில் Suzanne என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன், மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக CCTV கெமராக்களையும் பொருத்தியுள்ளார் Christian.

தனது உடல் நலனைக் குறித்து தனக்கு கவலையில்லை என்று கூறும் Christian, இரவு தூக்கத்திற்குப்பின் காலையில் கண் விழிக்காமலே போய் விடும் வாய்ப்புள்ள ஐந்து பேரில் ஒருவராக நான் இருக்கிறேன் என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers