பிரான்சில் இலவச சிகரெட் கொடுத்து நூதன கொள்ளை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் நச்சுப்பொருள் தடவிய சிகரெட்டை கொடுத்து திருடும் ஒரு நூதன கொள்ளைக் கும்பலை பொலிசார் தேடி வருகிறார்கள்.

பிரான்சின் Roanne நகரில், இத்தகைய சில சம்பவங்கள் நடந்துள்ளன.

வழியில் சந்திப்பவர்களிடம் நட்பாக பேசுவது போல் பேசி, அவர்களிடம் நச்சுப்பொருள் கலந்த சிகரெட்டைக் கொடுத்துள்ளனர் சிலர்.

அந்த சிகரெட்டைப் பிடித்த சிலருக்கு மயக்கம், உணர்வற்ற நிலை ஆகிய பிரச்சினைகள் ஏற்பட்டதும், அவர்களிடமிருந்த மொபைல் போன்கள், பர்ஸ் முதலானவற்றை திருடிச் சென்றுள்ளது அந்த கும்பல்.

விசாரணை அதிகாரிகள், அந்த சிகரெட்டில் ஏதோ நச்சுப்பொருள் தெளிக்கப்பட்டிருப்பதாலேயே அதை பிடித்தவர்களுக்கு மயக்கம் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் சாலையில் கிடந்த கற்களை எடுத்து விழுங்கியிருக்கிறார்.

மற்றொருவர் தனக்கு உதவ வந்த மருத்துவ உதவிக் குழுவினரிடமே முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்டெடுக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்தம் ஆகியவை அவற்றில் என்ன நச்சுப்பொருள் கலந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

உள்ளூர் கொள்ளைக் கூட்டம் ஒன்று இதன் பின்னணியில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers